புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே இடி மின்னல் தாக்கியதில் பெண் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தார். தகவலறிந்த கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, சங்கம்விடுதி ஊராட்சிக்கு உள்பட்ட மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகந்நாதன். இவரது மனைவி கோகிலா(40) வியாழக்கிழமை பிற்பகலில் வயல்பரப்பில் பசுமாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது பலத்த இடிச்சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கோகிலா உயிரிழந்தார். அத்துடன் இவர் மேய்த்துக் கொண்டிருந்த மாடும் உயிரிழந்தது.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை போலீசாரை வரவழைத்து, கோகிலாவின் சடலத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கை செய்தார்.
மேலும், இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். இசட்டமன்ற உறுப்பினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.