காவலர் வீரவணக்க நாளையொட்டி புதுக்கோட்டையி்லுள்ள காவலர் நினைவு சதுக்கத்தில் மாவட்டக்காவல்துறை சார்பில் மலர் வளையம் வைத்து வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1959 -ஆம் ஆண்டு 21 -ஆம் தேதி லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப்படை போலீஸார் 10 பேர் உயிரிழந்தனர்.
கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த இந்தக் காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும், ஆண்டு தோறும் பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் காவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் காவல்துறையில் கடமையாற்றும் போது தமிழகம் உள்பட நாடு முழுதும் இதுவரை உயிர் நீத்த காவலர்களுக்கு காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நீத்தார் நினைவு சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், தீயணைப்பு அலுவலர்கள், துணை காவல் கண்காணிப்பா ளர்கள்,சிறைத்துறை அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆயுதப்படை துணை காவல் கண்காணிப் பாளர் முருகராஜ் , நீத்தார் நினைவு நாள் கவாத்தை ஆயுதப்படை ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர் செய்தனர்.