Close
நவம்பர் 24, 2024 6:07 மணி

மின்னல் தாக்கி இறந்தோரின் குடும்பத்தினருக்கு பேரிடர்மேலாண்மை நிவாரண நிதி வழங்கல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் மின்னல் தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குகிறார், எம்எல்ஏ சின்னத்துரை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மற்றும் கந்தர்வகோட்டை தொகுதிகளில் மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சத்திற்கான காசோலையை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் எம்எல்ஏ சின்னத்துரை ஆகியோர்  நேரில் சென்று வழங்கினர்.

கந்தர்வகோட்டையில் மின்னல் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம்:  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே இடி மின்னல் தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு பேரிடர் கால நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் அரசு சார்பில் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, சங்கம்விடுதி ஊராட்சிக்கு உளபட்ட மணப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள ஜெகன்நாதன் மனைவி கோகிலா(40) வியாழக்கிழமை பிற்பகலில் பசுமாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கோகிலா  உயிரிழந்தார். அவர் மேய்த்துக் கொண்டிருந்த மாடும் உ.யிரிழந்தது.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை போலீசாரை வரவழைத்ததோடு, கோகிலாவின் சடலத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில்,  பேரிடர் கால நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் உயிரிழந்த கோகிலாவின் குடும்பத்திற்கு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேற்படி நிதியை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் பரமசிவம், பொருமாள், துணைத் தலைவர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமயம் தொகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம்: திருமயம் வட்டம், கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவர் மின்னல் தாக்கி இறந்ததைத் தொடர்ந்து, மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்தினரிடம் இன்று (22.10.2022) நேரில் வழங்கினார்.

புதுக்கோட்டை
திருமயம் தொகுதியில் நிவாரண நிதி வழங்கிய அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கீழாநிலை குறுவட்டம், காரமங்கலம் உள்வட்டம், கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் மகன் சிவா என்பவர் மின்னல் தாக்கி கடந்த 13.06.2022 அன்று இறந்ததைத் தொடர்ந்து, மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்எஸ்.ரகுபதி , மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்தினரிடம் இன்றையதினம் நேரில் வழங்கினார்.

இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், வட்டாட்சியர் பிரவினாமேரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கலைவாணி சுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top