புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை கற்பக விநாயகா திருமண மஹாலில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (04.11.2022) கலந்து கொண்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைகளை வழங்கினார்.
பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை தாய்மார்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமான, அறிவுத்திறன்மிக்க குழந்தைகளாக வளர்க்கலாம்.
எனவே தாய்மார்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் கடைபிடித்து தாங்களும் தங்களது குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.
நிகழ்ச்சியில் 350 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்களாக, தட்டு, ஊட்டச்சத்து பரிசு, மஞ்சள், குங்குமம், வளையல், மாலை, தாய்ப்பால் குறித்த கையேடு, 1000 நாட்கள் குறித்த கையேடுகளும், காலை சிற்றுண்டி உணவாக கொழுக்கட்டை மற்றும் பாசிப்பருப்பு பாயாசம், மதிய உணவாக சர்க்கரை பொங்கல், புளிசாதம், கருவேப்பிலை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் ஆகிய 5 வகை கலவை சாதங்களும் வழங்கப்பட்டன.
மருத்துவக் குழுவினர் மூலமாக அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இரத்த சர்க்கரை, இரத்த அழுத்த பரிசோதனைகளும், கர்ப்பகால ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் கர்ப்பகால பராமரிப்பு, இணை உணவுப் பொருட்கள், சிற்றுண்டி, காய்கனி அலங்காரம் உள்ளிட்டவைகள் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.லியாகத்அலி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்;