வள்ளலாரை பேசுகிற போது செய்குதம்பி பாவலரரையும் நினைவில் கொள்ள வேண்டியது நம் கடமை என்றால் அது மிகையாகாது.
இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை ‘திருஅருட்பா‘ என்று கூறுவது சமயக்குரவர்களை அவமதிப்பதாகும் என்று யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலரும் அவரது ஆதரவாளர் களும் கடுமையாக எதிர்த்து ‘மருட்பா’ எனக் கூறி மறுப்புரை செய்தனர்.
அதை அறிந்து, மனம் வருந்தி செய்குதம்பி பாவலர் காஞ்சிபுரத்தில் நெஞ்சைத் தொடும் படி உரையாற்றி, வள்ளலாரின் பாக்கள் அருட்பாக்களே என நிலைநாட்டினார்.
ஓர் இஸ்லாமியப் புலவர் சைவ சமயவாதிகளுக்கிடையே நுழைந்து, அவர்களது வாதங்களுக்கு, தம் திறமையால் அவற்றை தகர்த்து தவிடு பொடியாக்கிய அவரது இனிய சொற்பொழிவைப் பாராட்டி காஞ்சி மக்கள் பாவலர்க்கு ‘தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்’ என்ற பட்டம் வழங்கினார்கள்.
ஓர் இஸ்லாமியப் புலவரான பாவலரை யானை மேல் அமர்த்தி நகர்வலம் செய்வித்து, காஞ்சி ஆலயத்தார் பூரண கும்ப மரியாதை செய்து வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சிகளால் கவரப்பட்டு பாவலரையே குருவாக ஏற்றுக்கொண்டார் திரு.வி.க. பாவலர் என் குரு ஸ்தானத்தில் இருக்கிறார். இராமலிங்க சுவாமிகளின் பாடல்களை என் குரு கதிரைவேற்பிள்ளை ‘மருட்பா’ என்ற பொழுது, அவருக்கு எதிராகப் பாவலர் ‘அவை அருட்பா தாம் ‘ என்று சொற்பொழி வாற்றினார்.
அவருடைய சொற்பெருக்கை நான் குறிப்பெழுதி கொள்வேன் என்றும், என் குரு இறந்து விட்டதால் தமிழ் மரபுப்படி அவருடைய எதிரியாகிய பாவலர் தாம் என் குருவாகின்றார் என்றும் தம் நாட்குறிப்பில் எழுதினார்.
மதம் கடந்து ஞானம், சன்மார்க்கம் என்பதற்கு சதாவதானி செய்குத்தம்பி பாவலர் ஓர் ஒப்பற்ற உதாரணம். நம் நாடு மதம் கடந்த மனிதநேயம் ஆன்மநேயம் இரண்டையும் போற்றும் புண்ணிய பூமியாக இருந்திருக்கிறது.
…இங்கிலாந்திலிருந்து சங்கர்🎋