Close
நவம்பர் 21, 2024 10:19 மணி

உங்களுக்கு புண்ணியமா இருக்கட்டும்… எங்களை அப்படி கூப்பிடாதீங்க…

கோயம்புத்தூர்

வெட்டியான் என்ற பெயர் சொல்லி அழைக்க வேண்டாமே

உங்களுக்கு புண்ணியமா இருக்கட்டும் எங்களை அப்படி கூப்பிடாதீங்க..
“ஏன் டா மா நீ இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலை …?”
“இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்னை எல்லோரும் வெட்டியான் வீட்டு பிள்ளைன்னு கிண்டல் பண்றாங்க நான் இனி போகமாட்டேங்க” .

ஆமாங்க இது நான் மிகவும் மதிக்கும் மயானத்தில் பணிபுரியும் என் சகோதரி போன்ற வைரமணியின் பேத்தி தான் அந்த சிறுமி. பள்ளியில் இவங்க குடும்பத்தொழிலை சக மாணவர்கள் ஏளனமாக பேசியது அந்த பிஞ்சு மனதில் அவ்வளவு காயத்தை  ஏற்படுத்தியுள்ளது.

விபரம் தெரியாத குழந்தைகள் மட்டும் இல்லைங்க விபரம் தெரிந்த படித்த மேதாவிகள் முதல் படிக்காதவர் வரை பலரும் இப்படித்தான் மரியாதை குறைவாக பிறர் மனதை புண் படுத்தி பேசுவதே நாகரிகமாக எண்ணி பெருமைபட்டுக்கொள்கிறார்கள்.

நீங்கள் யாரும் கவனித்து இருக்கீங்களா , ஏன் அதில் நீங்கள் கூட ஒருவராக இருந்திருக்கலாம் , மயானத்தில் நாம் மதிக்கும் மாண்பான நம் குல வழக்கப்படி சடங்கு சம்பிரதாயங்கள் செய்கிறோம் … ஒரு சடங்கு முடிந்ததும் அந்த தொழிலாளியை இறந்தவரின் உறவினர்கள் அழைக்கும் தோரணை இருக்கிறதே… மனித நேயம் உள்ளவர்கள் கண்டிப்பாக வருந்த கூடும் .

” எங்க டா அந்த வெட்டியானை வர சொல்லு .. எங்க டா போயிட்ட , என்ற உரத்த குரலில் கத்துவதும் , இல்லங்க சாமி இங்கே தானுங்க இருக்கேன் என்று அந்த மயான தொழிலாளி தன் தோளில் இருந்த துண்டை தன் கையில் ஏந்தி கூனி நிற்பதும் உனக்கு எவ்வளவு கூலி , ஐயா 3000 ங்க என்று கூற … இந்தா இவ்வளவு தான் இது போதும் என்று பேரம் பேசுவதற்கு கூட தகுதியற்றவர்களாக எண்ணி ஒன்றுக்கு பாதியாக கூலி கொடுத்து விரட்டிவிடும் நிகழ்வு நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த கூலி கொடுப்பது கூட எப்படி என்று அனைவருக்கும் தெரியும். ஒரு வேட்டியை தரையில் விரித்து வைத்துக் கொண்டு அதில் அந்த பணத்தை தூக்கி போடுவார்கள் , அந்த மயான தொழிலாளி சற்று தள்ளி இருந்து வேட்டியில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு செல்வார்.

அது சரி வெட்டியானை வெட்டியான்னு கூப்பிடாம எப்படி கூப்பிடுறது ன்னு உங்களுக்கு தோணலாம்… அவரின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு பெயர் சொல்லி அழைக்கலாமே… அதனால் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் தெரியுமா..!.

நீங்கள் அவர்கள் பார்த்த வேலைக்கு தான் கூலி தருகிறீர்கள் , பிச்சை கிடையாது அதை மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் கையில் பணத்தை கொடுங்கள்… அப்படி பெரியவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்து சிறியவர்களும் அவர்களை மதிக்க கற்றுக் கொள்வார்கள் ..

மனித உடல்களை எரிப்பதற்கும் , அடக்கம் செய்வதற்கும் மட்டும் நாம் அவர்களை பயன் படுத்திக் கொள்வது இல்லை. எங்காவது இறந்து கிடக்கும் விலங்குகளை அகற்றவும் (மாடு, ஆடு, பூனை, நாய்) சாலை விபத்தால் இறந்த உடல்களை அகற்றவும், இரயிலில் அடிபட்டு இறந்த விலங்குகள் மற்றும் மனித உடல்களை அகற்றவும் பயன் படுத்திக் கொள்கிறோம் . இதற்கு அவர்களுக்கு அளிக்கப்படுவது 100 லிருந்து 150 ரூபாய் மற்றும் ஒரு குவாட்டர் பாட்டில் சரக்கு அவ்வளவு தான்.

அது மட்டுமின்றி பிணவறைகளில் பிரேத பரிசோதனையில் உதவி செய்யவும் பல நாட்களாகப் பல மாதங்களாக யாராலும் வாங்கப்படாத உடல்களை நல்லடக்கம் செய்ய இன்னும் சில நேரங்களில் இயற்கை சீற்றத்தால் இறந்த உடல்களை எல்லாம் அகற்றவும் நீரில் மூழ்கி இறந்து போன அழுகி கிடக்கும் சடலம் எடுப்பதும் என பயன் படுத்திக் கொள்கிறோம் .

ஒரு கேள்வி? ஏன் பல தலைமுறைகளாக தொடர்ந்து ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களே இந்த தொழிலை செய்து கொண்டு வரவேண்டும்? ஒரு மயான தொழிலாளியின் மகன் ஏன் ஒரு மருத்துவராகவோ, மாவட்ட நிர்வாகியாகவோ, ஒரு மந்திரியாகவோ, ஒரு ஆகக் கூடாது. முதலமைச்சராகவோ ஏன் ஆகவில்லை? ஏன் அவர்கள் குடும்பம் சொந்த வீடு, நல்ல உணவு, நல்ல உடை என்ற ஒரு வாழ்க்கையை வாழ இயலவில்லை? கல்வி பெற அவர்களை நாம் அழைக்கும் அந்த பெயர் முட்டுக்கட்டையா?

ஆம் வெட்டியான் என்ற அந்த ஒற்றை வார்த்தையில் தான் அவர்களை ஒதுக்கியும், ஒடுக்கியும் முன்னேற விடாமல் மயானத்திற்குள்ளேயே வைத்து இருக்கிறோம் . இந்த தொழிலுக்கு அவ்வளவு சுலபமாக யாரும் வந்து விட முடியாது , அந்த வேலையை செய்திடவும் முடியாது. இவர்கள் சமுதாயத்தில் முன்னேறிவிட்டால் என்ன என்ன விபரீதம் நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று .

ஒன்று தெரியுமா தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் தான் இந்த மயான தொழிலாளர்கள், ஆனால் இந்த தொழில் செய்வதால் சக தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் அதாவது இவர்களுடைய உறவினர்களே இவர்களிடம் நெருங்குவது இல்லை… எவ்வளவு பெரிய சாபக்கேடு இது.

ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு கொள்ளி வைப்பதை அவ்வளவு முக்கியத்துவமாக பார்க்கிறோம். ஆனால் கொள்ளி வைத்து முடித்ததும் அனைத்து உறவினரும் அங்கிருந்து சென்று விட்ட பிறகு , இந்த மயான தொழிலாளர் குடும்பத்தில் உள்ள பெண்கள் குழந்தைகள் என யாவரும் பிணத்தை சரியாக பார்த்து பார்த்து எரிப்பது யாருக்கு தெரியும்.

தொடர்ந்து பிணங்களை எரிப்பதால் அவர்களில் பலரும் சுவாச சம்பந்தமான நோய்வாய்ப்படுகிறார்கள். 25 பிணம் எரிக்கும் தொழிலாளர்களில் ஒருவர் கண்டிப்பாக நுரையீரல் பாதிப்புக்குள்ளாகின்றார். பல காரணங்களுக்காக இறந்து போன உடல்களையும் சில சிதைந்து போன எரிந்து போன உடல்களையும் தகனம் செய்யும் போது இவர்கள் மன ரீதியான பாதிப்புக்குள்ளாவது எத்தனை பேருக்கு தெரியும் .

பிணம் எரிக்கும் தொழில் செய்யும் ஊழியர்களுக்கான பணி நியமனம், மாதச்சம்பளம், மருத்துவப் பரிசோதனை முறைகள், தடுப்பு ஊசிகள், எரிப்பதற்கான தற்காப்பு சாதனங்கள் பெறுவது போன்ற எதற்கும் இவர்களுக்கு வழி தெரியாது.

அரசு தரப்பில்…

அரசு தரப்பில் இவர்களுக்கான நலத்திட்டங்கள் என்று பார்த்தால் மிகவும் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளது. நடைமுறையில் இத்திட்டங்கள் உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
2007 -ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஸ்டாலின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த போது சென்னை மாநகராட்சியில் நிரந்தரப் பணியில் இல்லாமல் தற்காலிகப் பணியில் இருந்த 173 பிணம் எரிக்கும் தொழிலாளிகளுக்கு ‘மயான உதவியாளர்கள்’ என்று பணிநியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

மாதச் சம்பளமாக ரூ.5,000 வழங்குமாறும் பணி நியமனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மயான உதவியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியில் பணிநியமனம் அளித்தது போல கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் இருக்கும் பிணம் எரிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த 173 தொழிலாளர்களின் தற்போதைய நிலை என்ன என்பதுக் குறித்த சரியான விவரமும் தற்போது இல்லை. இதைத் தொடர்ந்து, “மயான பணியாளர்கள் சங்கம்” என்று ஒரு சங்கம் நிறுவப்பட்டு அதன் முதல் மாநில அளவிலான மாநாடு, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் நடந்தது.

இம்மாநாட்டில், மாத ஊதியம், வெட்டியான் என்ற பெயரை நீக்குவது , மயான தொழில் செய்யும் பெண்களுக்கான பிரசவ கால உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு, தடுப்பூசிகள் போடுவது, மருத்துவ பரிசோதனைகள், மாற்றுத் தொழில் வழங்குவது போன்ற பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

ஆனால், அதற்குப் பின் அந்த சங்கத்தைப் பற்றியோ கோரிக்கைகள் பற்றியோ தொடர்ந்து செய்திகள் வரவில்லை என்பதே உண்மை. இத்தொழிலாளர்கள் பலருக்கு இச்சங்கத்தைப் பற்றியே தெரியவில்லை. இந்த மாநாடு அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய அமைச்சராக இருந்த ஏ. தமிழரசி  முன்னிலையில் நடந்தது என்பது கூடுதல் தகவல்.

அரசாங்கத்தில் வேலை பார்க்கும் தலைமை பதவியில் இருப்பவரில் இருந்து கடை நிலை ஊழியர் வரை அனைவரும் சம்பளம் சார்ந்த மற்றும் சம்பளம் சாராத பல உதவியைப் பெறும் நிலையில், (மயானங்களில்) தலைமுறை தலைமுறையாக பணிபுரியும் ஊழியர்களில் நிலைதான் என்ன? முதலில் சக மனிதர்கள் இவர்களையும் மனிதர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமா ?
மயானங்களைப் பராமரிப்பது, மயானங்களை ஏற்படுத்துவது, அரசாங்கம் மற்றும் அரசாங்கங்களின் பணி என்றால் மயான பணியாளர்களை நியமிப்பது அவர்களுக்கான சலுகைகள் வழங்குவதும் அரசாங்கத்தின் பணி தானே.

தலைமுறை தலைமுறையாக இப்பணியைச் செய்யும் தொழிலாளிகளின் இன்றைய தலைமுறையினருக்காக கல்வி உதவி, மாற்றுத் தொழிலுக்கான உதவிகளையும் அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும் . பிணம் எரிப்பதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பவர்களின் மனநிலை பாதித்து குடிப்பழக்கத்திற்குப் பலியாகாமல் இருக்க மனநிலை நிபுணர்களைக் கொண்டு சிறப்பு கலந்தாய்வு நடத்தலாம்   என்ற   வேண்டுகோளை பரிசீலனை செய்ய வேண்டும்.

ஐந்தறிவு படைத்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கப் புத்துணர்வு முகாம் நடத்தும் போது, இறந்து போன நமது உறவினரையும் நமது நண்பர்களையும் நமது உற்றார்களையும் சீராக தகனம் செய்யும் நம் மயான தொழிலாள நண்பர்களுக்கான அனைத்து அடிப்படை மற்றும் நிதி வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துவது  ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை அல்லவா..!.

எங்கேயோ உலகத்தின் மூலையில் யாருக்கோ நடக்கும் அநீதி கண்டு சமூக ஊடகங்களில் பொங்கி எழும் இளைஞர்கள் இது போன்ற நம் வாழ்வியலில் கட்டாயம் இருக்க வேண்டிய இவர்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே… இளைஞர்கள் தம் வீட்டில் உள்ள சிறு பிள்ளைகளுக்கு இது போன்றவர்கள் மனதை புண்படுத்தி பேசக்கூடாது என அறிவுறுத்தலாம். இளைஞர்கள் நினைத்தால் கண்டிப்பாக நல்ல மாற்றம் உருவாகும்…

இப்படி எல்லாம் எழுதி விட்டு அந்த மயான தொழிலாளி வைரமணியிடம் கொண்டு போய் படித்து காட்டினால் , அந்த வைரமணி என்ன சொன்னார் தெரியுமா.

“இத்தனை ஆண்டு காலம் எந்த மனிதர்களும் எங்க முகம் பார்த்து பேசியது இல்லை . ஊருக்குள்ள என்ன நடக்குதுனே தெரியாது, வரவங்க போறவங்க எல்லாம் எங்களை வெட்டியான் வெட்டியான்னு தான் கூப்பிடறாங்க அதுவே இன்னும் மாத்திக்க தெரியாத இந்த மனுசங்க தானா எங்களுக்கு இவ்வளவு உதவி செய்ய போறாங்க . எங்களை எல்லாம் முன்னேறவே விட மாட்டாங்க சார் நீங்க ஏனுங்க சார் வெட்டியா இப்படி எழுதிட்டு உங்க நேரத்தை கெடுத்துட்டு இருக்கீங்க ,

முதலில் அந்த வெட்டியான்னு சொல்றதை நிறுத்தச் சொல்லுங்க சார் . நாங்களும் எங்க குழந்தைகளும் வருங்கால தலைமுறைகளும் நல்லா இருப்போம்.உங்களுக்கு புண்ணியமா போகட்டும்இனி வெட்டியான்னு கூப்பிடாதிங்க…

செய்தி: ஈரநெஞ்சம் மகேந்திரன்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top