புதுக்கோட்டை மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் மணிமண்டபத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்க மன்னர் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழா கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழா குழுவினர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து மாமன்னருக்கு ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கையை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் ,”மாமன்னருக்கு புதுக்கோட்டையில் மணிமண்டபம் கட்டப்படும் அதில் கண்காட்சியும் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.
1948 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்திய அரசுடன் இணைத்த 1974 ஆம் ஆண்டு தான் வாழ்ந்த நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட புது அரண்மனை வளாகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்காக கொடுத்த மாட்சிமை தங்கிய மாமன்னர் அவர்களுக்கு அந்த வளாகத் திற்குள்ளேயே மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் மாமன்னருக்கு மணிமண்டபம் அமைக்க சட்டம் இடம் தரவில்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதுடன் வேறு பல இடங்களை சுட்டி காட்டினார்கள்.
மாமன்னருக்கு அவர்கள் வாழ்ந்த அந்த அரண்மனை வளாகத்தில் தான் மணிமண்டபம் அமைப்பது பொருத்தம் என்று மற்ற இடங்களை ஏற்க விழா குழுவினர் மறுத்து விட்டனர். இந்த சூழ்நிலையில் 23.11.2022 -ஆம் தேதி புதுக்கோட்டைக்கு வருகை தந்த சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களிடம் கோரிக்கை வைத்தோம்.
அவர் தன்னுடன் வந்த 12 சட்டமன்ற உறுப்பினர்களோடு கலந்து ஆலோசனை செய்து மாமன்னருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே இரண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி மணிமண்டபம் கட்ட சட்டபூர்வமாக பரிந்துரை செய்து ஆணையிட்டார்.
மேலும் அன்று மாலையே தமிழ்நாடு முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுக்கோட்டை மாமன்னருக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள்ளேயே இரண்டு ஏக்கர் இடம் மணி மண்டபம் கட்ட ஒதுக்கீடு செய்து பரிந்துரைத்துள்ளோம் என்ற தகவலை சொன்னார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் அந்தப் பரிந்துரையை பாராட்டி “மிகப் பொருத்தமான ஒரு செயலைச் செய்திருக் கிறீர்கள் மாமன்னருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு உள்ளேயே இரண்டு ஏக்கர் இடம் ஒதுக்கி மணி மண்டபம் கட்டுவதுதான் பொருத்தம் என்று அனுமதித்துள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயலைப் பரிந்துரை செய்த
செல்வப் பெருந்தகையை நேற்று மாலை திருச்சியில் விழா குழுவினர்கள் புதுக்கோட்டை மகாராணியார் சாருபாலா தொண்டைமான் தலைமையில் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்துக் கொண்டோம்.விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து எங்கள் நன்றியை தெரிவிப்போம்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் தென்கிழக்கு மூலையில் பி.எல்.ஏ. ரவுண்டானா அருகில் இரண்டு ஏக்கர் இடத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதாராமு அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம் என கம்பன் கழகச்செயலர் ரா. சம்பத்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், மூத்த வழக்கறிஞர் ஏ. சந்திரசேகரன், நகர் மன்ற உறுப்பினர் ராஜாமுகமது, முன்னாள் உறுப்பினர் ஏ. இப்ராஹிம்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.