Close
நவம்பர் 22, 2024 7:23 மணி

சென்னையில் எண்ணெய், ரசாயன கசிவு பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த தேசிய அளவிலான ஆலோசனை

சென்னை

எண்ணெய் மற்றும் ரசாயனக் கசிவு பேரிடர்களை எதிர்கொள்வது குறித்து இந்தியக் கடலோரக் காவல் படை தலைமை இயக்குனர் வி.எஸ்.பதானியா தலைமையில் புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டம்.

 எண்ணெய்க் கசிவு, ரசாயனக் கசிவு உள்ளிட்ட பேரிடர்களை எதிர் கொள்வதில் தயார் நிலை குறித்த தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய கடலோர காவல்படை சார்பில் எண்ணெய் கசிவு பேரிடர் மற்றும் தயார்நிலை குறித்த 24-ஆவது தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தியக் கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குனர் வி.எஸ்.பதானியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்கள், மத்திய மற்றும் மாநில அரசு துறைகள் மற்றும் முகமைகள், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் கையாளும் நிறுவனங் களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியக் கடற்பரப்பில் திடீரென எண்ணெய்க் கசிவு, ரசாயனக் கசிவு ஏதேனும் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கான பொதுவான நோக்கத்துடன் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றாவது இடத்திலும், ரசாயன இறக்குமதியில் உலக அளவில் ஆறாவது இடத்திலும் இந்தியா உள்ளது. எண்ணெய் மற்றும் ரசாயனங்கள் கப்பல்களில் கையாளப்படும்போது கசிவு ஏற்பட்டால் இந்தியாவின் கடல்சார் மண்டலங்கள், கடல்வாழ் உயிரினங்கள், கடலோரங்களில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகள், கடல் சுற்றுச் சூழல், தொழிற்சாலைகள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவைகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

மத்திய ஒருங்கிணைப்பு முகமை, கப்பல் உரிமையாளர்கள், எண்ணெய் கையாளும் வசதிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை எண்ணெய்க் கசிவை எதிர்த்துப் போராடுவதற்கு உதவிகரமாக இருக்க வேண்டும்.

கூட்டத்தில் கடலோரக் காவல் படை தலைமை இயக்குனர் பேசுகையில் எண்ணெய் கசிவு, ரசாயன கசிவு உள்ளிட்டவைகளால் இப்பிராந்தியத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கடலோரக் காவல் படையினர் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர்.

புதிய அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதால் அவற்றை எதிர்கொள்ள இதில் தொடர்புடைய நிறுவனங்கள் அனைத்தும் வலுவான கூட்டாண்மை, பயனுள்ள ஒருங்கிணைப்பு மற்றும் வளரும் தொழில்நுட்பத்தின் சிறந்த நடைமுறைகளை பயன்படுத்துதல் மூலம் போதிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை அனைவரும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top