ஈரோடு கனி ஜவுளி மார்கெட்டில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்குவது தொடர்பாக அமைச்சர் சு. முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகராட்சியில் பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் சுமார் ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கனி ஜவுளி மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்குவது தொடர்பாக வீட்டு வசதி துறை அமைச்சர் சு முத்துசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த வணிக வளாகத்தில் சுமார் 192 கடைகள் அமைக்கப்பட் டுள்ளன. அவற்றை நேரில் பார்வையிட்ட பிறகு அமைச்சர் முத்துசாமி செய்தியாளரிடம் மேலும் கூறியதாவது:
இவ்வளாகத்தில் உள்ள சில பிரச்னைகள் தொடர்பாக கருத்துகள் கூறப்பட்டுள்ளது. அந்தடு குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் ஏற்கெனவே 100 கடைக்காரர்கள் வணிகம் செய்து வந்தனர் . அப்பொழுது இருந்த அதிகாரிகள் அவர்களை இவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.
அவர்களுக்கு மீண்டும் வணிக வளாகத்தில் கடைகளை ஒதுக்கித் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் எழுத்துப்பூர்வமான வாக்குறுதி அளிக்கவில்லை. எனவே அரசு விதிகளின்படி ஏலத்தில் தான் இங்குள்ள கடைகளை ஒதுக்க முடியும். கடைக்கு ரூ 8 லட்சம் டெபாசிட், 12 மாதம் அட்வான்ஸ் ரூ. 32,000 வாடகை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கடைகள் பல மாநகராட்சிகளில் உள்ளன. இதர துறைகள் வாடகை மற்றும் டெபாசிட் நிர்ணயிக்கின்றன. அனைத்து மாநகராட்சிகளுக்கும் கடைகள் ஒதுக்குவது குறித்து பொதுவான விதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆகவே,தனியாக ஈரோடு மாநகராட்சிக்கு என விதிகள் இல்லை. மத்திய, மாநில அரசுகளின் மானியம் மூலம் இவ்வளாகம் கட்டப்பட்டுள்ளது. எனினும் அரசு விதிப்படி இதற்கான வாடகை மற்றும் டெபாசிட் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கு சிறு, குறு வியாபாரிகள் வர்த்தகம் செய்கின்றனர். அவர்கள் வருவாய்க்கு வாடகை மற்றும் டெபாசிட் அதிகம் என்று கூறுவதால், நகராட்சி வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கெனவே வேலூர் மாநகராட்சியில் சில வியாபாிகள் தொடுத்த வழக்கில் அவர்களுக்கு கடைகள் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வாடகை ,டெபாசிட் குறித்து எதுவும் கூறவில்லை.
ஈரோட்டிலும் சில வியாபாரிகள் நீதிமன்றம் சென்று தீர்ப்பு பெற்றுள்ளனர். அதிலும் வாடகை, டெபாசிட் குறித்து எதுவும் இல்லை. இவ்வளாகம் கட்டப்படும் போது சாலை குளத்தில் இருந்த வியாபாரிகள் அப்புறப்படுத்தப்படவில்லை. எனவே வியாபாரிகள் நலன் பாதுகாக்கப்படும்.
ஏற்கெனவே ஜவுளி வாரச்சந்தை இப்பகுதியில் நடந்து வந்தது. அதற்காக தனியாக இடம் ஒதுக்கவில்லை. இருந்தபோதிலும் அது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றார் அமைச்சர் சு. முத்துசாமி. ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ திருமகன் ஈவெரா, துணை மேயர் செல்வராஜ், மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியம் உட்பட பலர் உடன் இருந்தனர்.