Close
செப்டம்பர் 20, 2024 1:18 காலை

வடசென்னையில் சீற்றத்துடன் காணப்பட்ட வங்கக் கடல்: அச்சத்தில் மீனவர்கள்

சென்னை

மாண்டஸ் புயலால் கடல் சீற்றமுடன் காணப்பட்டதையடுத்து தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்ட காசிமேடு மீனவர்கள்.

மாண்டஸ் புயலால் கடல் சீற்றமுடன் காணப்பட்டதையடுத்து தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்ட காசிமேடு மீனவர்கள்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக வியாழக்கிழமை வடசென்னைக்கு உட்பட்ட காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததோடு தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. மாண்டஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதி முழுவதும் வியாழக்கிழமை சீற்றத்துடன் காணப்பட்டது.

குறிப்பாக காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் கடுமையான கடல் அலைகள் வீசின. சுமார் இரண்டு மீட்டர் உயரத்திற்கு ராட்சத கடல் அலைகள் எழும்பி பார்ப்பவர்களை அச்சமூட்டச் செய்தது. கடலரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர்கள்  ராட்சத அலைகளால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.  இதனால் ஆங்காங்கு தடுப்புச் சுவர்ககள் சரிந்து கடலில் மூழ்கி வருகின்றன.

இவ்வாறு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டால் எண்ணூர், திருவொற்றியூர் பகுதியில் கடலோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரச் செய்யும் பணிகளில் மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  கடலரிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள்,  கட்டுமரக் கலன்கள் உள்ளன. புயலின் தாக்கத்தால் கடல் அலை தடுப்புச்சுவரையும் தாண்டி வீசியதால் அச்சமடைந்த மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை கிரேன்கள் மூலம் கரைப்பகுதிக்கு கொண்டு வந்து பத்திரப்படுத்தினர்.

விசைப்படகுகளை இடைவெளியின்றி ஒன்றோடொன்று அணைத்து வைத்து கயிறுகளால் கட்டி வைத்தனர்.  எண்ணூர் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம்,  சின்னக்குப்பம், ராமகிருஷ் ணா நகர், நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பைபர் மற்றும் மரக்கலன்களை கிரேன்கள் மூலம் அகற்றி பாதுகாப்பான இடங்களில் வைத்தனர்.

கடல் கொந்தளிப்பு காரணமாக வடசென்னை பகுதியில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top