Close
செப்டம்பர் 20, 2024 1:25 காலை

சென்னைத் துறைமுகத்தின் கையாளும் திறன் 100 மில்லியன் டன்னை எட்ட இலக்கு

சென்னை

சென்னைத் துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 'துறைமுக தினம்' கொண்டாட்ட நிகழ்ச்சியில் அதிக அளவிலான சரக்குகளை கையாண்ட நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால்.

:வரும் 2024-ம் ஆண்டுக்குள் சென்னைத் துறைமுகத்தின் ஒட்டுமொத்த கையாளும் திறன் 100 மில்லியன் டன்னை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சென்னைத் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் திங்கள்கிழமை தெரிவித்தார்.

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் துறைமுக தின நிகழ்ச்சி திங்கள்கிழமை சென்னைத் துறைமுகத்தில் நடைபெற்றது. துறைமுகத் துணைத் தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார் முன்னிலையில் போக்குவரத்து மேலாளர் எஸ்.கிருபானந்தசாமி வரவேற்றார்.

இதில் தலைமை விருந்தினராகக் சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் கலந்து கொண்டு அதிக அளவிலான சரக்குகளைக் கையாண்டு துறைமுகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த 22 நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.  மேலும் கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த துறைமுக ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதியை சுனில் பாலிவால் வழங்கினார்.

ஆண்டுக்கு 100 மில்லியன் டன் இலக்கு:  சுனில் பாலிவால் 

கொரோனா பெருந்தொற்று போன்ற கடினமான காலத்திலும் துறைமுக ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றியது பாராட்டுக்குரியது. அண்மையில் தாக்கிய மாண்டஸ் புயல் கரையைக் கடந்தபோது சென்னைத் துறைமுகத்திற்கு பலத்த அச்சுறுத்தல்கள் இருந்தன. இருப்பினும் துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள் திட்டமிட்டு திறம்பட பணியாற்றியதால் புயலால் ஏற்படவிருந்த பாதிப்பு பெருமளவு தவிர்க்கப்பட்டது.
சென்னைத் துறைமுகத்தை தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல ஊழியர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும். வரும் 2023-24 ஆ-ம் நிதியாண்டிற்குள் சென்னைத் துறைமுகத்தின் ஒட்டுமொத்த கையாளும் திறன் 100 மில்லியன் டன்னை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னைத் துறைமுகத்தின் துணை நிறுவனமாக உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்துடன் இணைந்து இந்த இலக்கை எட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் உறுதியேற்க வேண்டும் என்றார் சுனில் பாலிவால்.
இதில் துறைமுகத்தின் துறை தலைவர்கள், ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top