சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, சட்டம் – ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்காக திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிப் பகுதிகளில்டிச.13-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலர்கள் டாக்டர் சி. விஜயபாஸ்கர், பி.கே. வைரமுத்து ஆகியோர் வழிகாட்டுதலின்படி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரச்செயலர்கள் க. பாஸ்கர், எஸ்.ஏ.எஸ் சேட்(எ) அப்துல்ரகுமான் ஆகியோர் தலைமை வகித்தனர். அதிமுக நிர்வாகிக வி.சி. ராமையா, வீ. ராமசாமி, முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம், டி.சி.வி. ராஜு, டவுன் பேங்க் மாரிமுத்து, ஜீவாசெல்வராஜ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்
தொடரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, வரும் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
எனினும், இதர மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவித்தவாறு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்க ளிலும் வரும் 14-ம் தேதியும், ஏற்கெனவே தள்ளிவைக்கப்பட்ட பேரூராட்சி அளவிலான ஆர்ப்பாட்டம் வரும் 16-ம் தேதியும் நடைபெறும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.