பொது மக்களிடம் எதற்கெடுத்தாலும் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டுமென மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல குழு மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல குழு தலைவர் தி. மு. தனியரசு தலைமை வகித்தார். திருவொற்றியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே .பி. சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயராமன், சொக்கலிங்கம், கவி கணேசன் ஆகியோர் பேசியதாவது:
திருவொற்றியூர், கத்திவாக்கம் பகுதிகள் நகராட்சியாக இருந்து அண்மையில் தான் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்க ளிடம், பழைய வீடுகளுக்கு கட்டட அனுமதி கேட்கின்றனர்.
மேலும் தண்ணீர் தேங்குதல்,பிளாஸ்டிக் பயன்பாடு, கட்டட கழிவுகளை வெளியே கொட்டுதல், குப்பைகளை தரம் பிரித்து ஒப்படைத்தல், பெயர் பலகைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எதற்கு எடுத்தாலும் வீடு மற்றும் கடைகளில் ஆய்வு நடத்துகிறோம் என்ற பெயரில் தொடர்ச்சியாக உடனடி அபராதம் விதிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களை மிரட்டுவதாகவும் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இதனால் அரசுக்குத்தான் அவப்பெயர் ஏற்படுகிறது.
ஆனால் இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் எல்லாத்துறை அதிகாரிகளுமே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின் றனர்.
ஒரு திட்டம் குறித்து சிறப்பான செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனில் பொதுமக்களிடம் முதலில் விழிப்புணர் வை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு தகுந்த பயிற்சி மற்றும் ஆலோசனைகளை அளிக்க வேண்டும்.
இதன் பிறகு அபராதம் குறித்து அவர்களுக்கு விளக்கமாக நோட்டீஸ் வழங்க வேண்டும். இதனை விடுத்து விட்டு எதற்கெடுத்தாலும் அபராதம், அபராதம்தான் விதிப்போம் அதிகாரிகள் செயல்படக் கூடாது என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
காணாமல் போன பேருந்து நிலையம் : எம் எல் ஏ புகார்
தாழங்குப்பம் பகுதியில் ரூ. 11 லட்சம் செலவில் அமைக்கப் பட்ட பேருந்து நிலையம் தற்போது அங்கு இல்லை. இதனை அகற்றுவதில் தனி நபர்களுடன் அதிகாரிகள் உடந்தையாக இருந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த இடம் அரசு புறம் போக்கு நிலம் ஆகும். இதே போல சத்தியமூர்த்தி நகரில் ஆக்கிரமிப்பு செய்து அத்துமீறி கட்டப்பட்ட வணிக வளாகம் மூடி சீல் வைக்கப்பட்டது.
இதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. தற்போது அந்த வணிக வாளாகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது . எனவே இதுகுறித்து உடனடியாக உயரதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் பிரதிநிதிகளோடு அதிகாரிகளும் இணைந்து பணியாற்றினால் தான் அரசுக்கு அவப்பெயர் ஏற்படாமல் நல்ல பேரை ஏற்படுத்தித் தர முடியும் என்றார் கே பி சங்கர்.
இதனையடுத்து கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன இறுதியாக பல்வேறு திட்டப் பணிகள் குறித்து 36 தீர்மானங்கள் மண்டல மாமன்ற குழு கூட்டத்தில் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மண்டல அலுவலர் சங்கரன், உதவி மருத்துவ அதிகாரி சரஸ்வதி மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.