Close
நவம்பர் 22, 2024 6:12 காலை

உலக சாதனைக்காக கொங்கு பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம்…!

ஈரோடு

பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சி

பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் மங்கை வள்ளி கும்மி குழு சார்பில் 45 -ஆவது அரங்கேற்ற விழா மற்றும் உலக சாதனைக்காக ஒரே இடத்தில் 1000 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமை வகித்து பேசினார்.  பெருந்துறை பாலு, வெள்ளோடு நடராஜ் கவுண்டர், வழக்கறிஞர் மணியன், நிர்வாக இயக்குனர் ரேகா கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சக்தி மசாலா நிறுவனம் சாந்தி துரைசாமி, சரஸ்வதி ஆகியோர் குத்து விளக்கேற்றினர். சாகர் இன்டர்நேஷனல் தாளாளர் சௌந்தரராசன் வரவேற்றார். நிகழ்ச்சியை தொடக்கி வைத்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் கேரளா முன்னாள் ஆளுநர் ப. சதாசிவம் பேசியதாவது:

கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மியாட்டக் கலை புத்துயிர் பெற்று வருகிறது. பண்டை காலத்தில் கும்மி ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது. கால மாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களைக் கொண்டே வந்துள்ளது.

ஈரோடு
பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடந்த உலக சாதனை கும்மி ஆட்டம்

வைகாசியில் கொண்டாடப்படும் மாரியம்மன் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்துக் கும்மியடிக்கின்றனர். நாட்டுப் ஒரு புறப்பாடல்களும், பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் கும்மியடிக்கும்போது பாடப்படுவதுண்டு. அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் கும்பி பற்றிய குறிப்புகள் உள்ளன.

திரைப்படம். ரேடியோ. தொலைக்காட்சி வளர்ச்சியாலும், மேற்கிந்திய இசையான பேண்டு வாத்தியம், இன்னிசை கச்சேரி போன்றவற்றாலும் வள்ளி கும்மி மீது மக்களுக்கு நாட்டம் குறைய தொடங்கியது. அழிந்து வந்த கும்மி ஆட்டக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு,திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மியாட்டம் கலை பயிற்சியை ஒரு சில ஆசிரியர்கள் இலவசமாக அளித்து வருகின்றனர்.

கேரளாவில் செண்டை கலையை வளர்க்கும் வகையில் அதனை சொல்லி கொடுக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது. அப்பயிற்சி பெற விரும்புவோ ருக்கு பயிற்சி ஊக்கத்தொகையை அம்மாநில அரசு வழங்கி வருகிறது.

அது போல் தமிழக அரசும் நம்முடைய மாநிலத்தில் இது போன்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கும்மி ஆட்டத்தை உலகறிய செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். சென்னை , டில்லியில் நடைபெறும் குடியரசு தினம், சுதந்திரதின நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மியாட்டம் கலந்து கொள்ள என்னால் ஆன முயற்சி செய்கிறேன் என்றார் சதாசிவம்.
நிகழ்ச்சியில் சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பி.சி. துரைசாமி, பட்டக்காரர் பாலசுப்ரமணியம், கொங்கு வேளாளர் கல்வி நிறுவனங்கள் சந்திரசேகர், சிறகுகள் அமைப்பின் தலைவர் விமல் கருப்பணன், பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், பிரவின்குமார், மகேஸ்வரி, மிதுவாசினி மற்றும் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top