Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

கல்வி நிலையங்களில் சின்னப்பா பெயரில் அறக்கட்டளை உருவாக்க வேண்டும்: ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற வர்த்தகர் கழகத்தலைவர் சீனு. சின்னப்பா புகழஞ்சலி கூட்டம்

புதுக்கோட்டையில் உள்ள கல்வி நிலையங்களில் சின்னப்பா பெயரில் அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்றார் ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் பா.கிருஷ்ணமூர்த்தி.

உலக திருக்குறள் பேரவை சார்பில் மறைந்த அறமனச் செம்மல் சீனு.சின்னப்பா அவர்களுக்கு, நில அளவையர் அரங்கில், உலக திருக்குறள் பேரவையின் தலைவர் சண்முக பழனியப்பன் தலைமையில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
புகழஞ்சலி கூட்டத்தில்  ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
உழைப்பு, உழைப்பு, உழைப்பு ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு உயர்ந்தவர் சின்னப்பா. இவருடைய வாழ்க்கை வரலாற்றை இன்றைய தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும். அதன்மூலம் இவர் போல உழைப்பால் சாதாரண மனிதனும் உயரமுடியும் என்பதை உணர்த்த வேண்டும்.

தனக்குத் தெரியாததை “தெரியாது” என்று சொல்லும் மனதைரியம் சின்னப்பாவிற்கு உண்டு. அதை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அவருக்குண்டு.

அவருடைய உழைப்பையும், ஈகைப்பண்பையும் இன்றைய தலைமுறை அறியச் செய்ய வேண்டியது அவசியம். அதற்கு அவர் பெயரில் புதுக்கோட்டையில் உள்ள கல்வி நிலையங்களில் அறக்கட்டளைகளை உருவாக்கி, இளையோர்களுக்கு நல்ல வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

புகழஞ்சலி கூட்டத்தில் பேசிய பலரும், புதுக்கோட்டைக்கு தனிமனிதராக பல அரிய பணிகளை சின்னப்பா செய்திக்கிறார். அதை நினைவு கூறும் வகையில், அவர் அடிக்கடி பயன்படுத்திய சாலைக்கோ அல்லது தெருவுக்கோ அவருடைய பெயரைச் சூட்ட புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

முன்னதாக, சீனு. சின்னப்பாவின் உருவப் படத்தினை குழந்தைகள் நல மருத்துவர் எஸ். ராமதாஸ் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சண்முக பழனியப்பன் தனது தலைமை உரையில்  “நட்பு , நன்றி, நாணயம் இம் மூன்றிற்கும் மிகச்சிறந்த இலக்கணம் சீனு.சின்னப்பா. அவருடைய ஈகைக்குணம் யாரிடமும் கிடையாது. தொழிலாளர் பராமரிப்பு, வாடிக்கையாளர் விருந்தோம்பல்,சுகாதாரம், சமூக சேவை இவற்றிற்கு எனது முன்னோடியாக சீனு.சின்னப்பாவையே கூறுவேன் என்று குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில்., மூத்த குடி மக்கள் அமைப்பின் தலைவர் க. ராமையா, மேனாள் வர்த்தகச் சங்க தலைவர் சேவியர் திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், இந்திய ரெட்கிராஸ் சங்க செயலர் ராஜாமுகமது, வர்த்தக சங்க தலைவர் ஷாகுல் ஹமீது, புண்ணியமூர்த்தி, தமிழ்ச் செம்மல் சம்பத்குமார், தமிழ்ச் செம்மல் தங்கம்மூர்த்தி, சா.விஸ்வநாதன், கோ.ச.தனபதி, பேராசிரியர் மு.பா ஆகியோரும் புகழஞ்சலி செலுத்தினர்.
இதையொட்டி குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் அனுப்பியிருந்த  புகழஞ்சலி செய்தி இக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.

உலகத் திருக்குறள் பேரவைச் சேர்ந்த மகா.சுந்தர் இறை வணக்கம் பாடினார்.  கு.சுப்பிரமணியன் குறட்பா வாசித்தார். செயலர் சத்தியராம் ராமுக்கண்ணு வரவேற்புரையாற்றினார். நிறைவாக பொறியாளர் கண்ணன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top