Close
செப்டம்பர் 20, 2024 6:36 காலை

மாற்றுத் திறனாளிகள் மீது இரக்கம் காட்டுவதற்கு கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும்

சென்னை

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனமான தூய்மை விழிகள் அறக்கட்டளை நிறுவனர் பா.வேல்முருகன் எழுதிய 'நம்பிக்கை முழக்கம்' என்ற நூலை வெளியிட்ட தமிழறிஞர் சாலமன் பாப்பையா.

மாற்றுத் திறனாளிகள் மீது இரக்கம் காட்டுவதற்கு கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றார் சாலமன் பாப்பையா.

மாற்றுத் திறனாளிகள் மீது இரக்கம் காட்டுவதற்கு கல்விச் சாலைகள் முன்வர வேண்டும். அப்போதுதான் அவர்களின் வாழ்வில் உன்னத நிலையை எட்ட முடியும் என பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா  தெரிவித்தார்.

மதுரை தூய்மை விழிகள் அறக்கட்டளை நிறுவனர் பா.வேல்முருகன் எழுதிய நம்பிக்கை முழக்கம் நூல் வெளியீடு, லூயி பிரெய்லி பிறந்த நாள், சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகளுக்கான பரிசளிப்பு உள்ளிட்டவை அடங்கிய முப்பெரும் விழா சென்னை லயோலா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பின்னர் சென்னையின் முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக மாற்றுத் திறனாளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரயில் மூலம் மதுரையிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர். இதில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா கலந்து கொண்டு ‘நம்பிக்கை முழக்கம்’  நூலை வெளியிட்டு சாதனை படைத்தோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் சாலமன் பாப்பையா பேசியதாவது: ஒரு தொண்டு நிறுவனம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக மதுரை தூய்மை விழிகள் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. ஒருவர் செய்யும் ஒற்றைச் செயல் பாட்டில் உண்மை இருக்கும் எனில் அவர்கள் செய்யும் நூறு செயல்பாடுகளிலும் உண்மை இருக்கும்.

மாற்றுத் திறனாளிகள் என்பவர்கள் மற்றவர்களின் இரக்கத்திற்கு ஆளாக வேண்டியவர்கள் அல்ல. அவர்களுக் கான தேவைகளைப் பெற்றிட உரிமை பெற்றவர்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் குறைகளைப் போக்கும் வகையில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றை வாங்கும் வசதி படைத்தவர்களாக பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.

ஞானக் குழந்தைகளாகக் கருதப்படும் மாற்றுத் திறனாளிகள் கல்வியை பெருவதற்கு கூட நல்மனம் படைத்த கொடையாளர் களிடம் நிதியுதவி பெற்று நேரடியாகவே பள்ளி,கல்லூரிகளின் கட்டணத்தை தூய்மை விழிகள் செய்து வருகிறது.  கல்வி வணிகமயமாகிவிட்ட நிலையில் இரக்கம் காட்டும் கல்வி நிறுவனங்கள் உருவாகவில்லை.

எனவே மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோருக்கு கல்வியை கட்டணமின்றி அளித்திட கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும். அப்போதுதான் இவர்கள் வாழ்வில் முன்னேற்றத் தைப் பெற முடியும். அனைவருமே தங்களது வருமானத்தில் சுமார் 5 சதவீதமாவது எளியவர்களுக்கு உதவிட ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதைத்தான் அனைத்து மதங்களும் வலியுறுத்தியுள்ளன என்றார் சாலமன் பாப்பையா.

நிகழ்ச்சியில் தூய்மை விழிகள் அறக்கட்டளை நிறுவனர் பா.வேல்முருகன்,  லயோலா கல்லூரி மாற்றுத் திறனாளிக ளுக்கான சிறப்பு மைய இயக்குனர் டே.கவிதா மேரி,  வருமான வரித்துறை ஆணையர் (ஓய்வு) அந்தோனி, ரோட்டரி கிளப் ஆளுனர் நந்தகுமார், ரோட்டரிசங்கத் தலைவர் ஏ.எல்.சிதம்பரம், தொழிலதிபர் க.மாணிக்கவாசகம், கவிஞர் மு.முருகேஷ், பிகஸ் அறக்கட்டளை நிறுவனர் கிரேஸ் ராஜசேகர், குருராஜ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top