போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்தி ஜனவரி 10 -ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை தஞ்சையில் நடத்துவதென போக்குவரத்து ஏஐடியூசி ஓய்வூதியர் 5 -ஆவது பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்கத்தின் 5 வது பேரவைக்கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட சங்க கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
பேரவைக்கு சங்கத் தலைவர் மல்லி ஜி. தியாகராஜன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். பொருளாளர் எஸ்.பாலசுப்பிர மணியன் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாநில குழு முடிவுகள் பற்றி சம்மேளன துணைத் தலைவர் துரை. மதிவாணன் பேசினார்.
கூட்டத்தில் ஏஐடியூசி தேசிய செயலாளர் சி.சந்திரகுமார் , மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.அன்பழகன், கும்பகோணம் போக்குவரத்துசங்க பொதுச்செயலாளர் தாமரைச்செல்வன் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 2023 -ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக தலைவர் மல்லி.ஜி.தியாகராஜன், கௌரவத் தலைவர் ஜெ.சந்திரமோகன், பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் களாக அ.சுப்பிரமணியன், எஸ். முருகையன், அ.இருதயராஜ் , நவநீதம் உதயகுமார், பி.சக்திவேல், துணைச்செயலாளர் களாக கே.சுந்தரபாண்டியன். எம்.வெங்கடபிரசாத், எஸ்.மனோகரன், பி.குணசேகரன், டி.தங்கராசு, சாந்தி சுந்தரராஜன் உள்ளிட்டோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் கூட்டத்தில் ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட வாறு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் உயர்ந்துள்ள அகவிலைப்படி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும், அகவிலைப்படி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பிற்கு மேல்முறையீடு சென்றதை திரும்ப பெற்று நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
திமுக தேர்தல் கால பரப்புரையில் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் போக்குவரத்து ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடமாகியும் நிறைவேற்றப்படவில்லை.
மிகுந்த மனவேதனையில் உள்ள 85 ஆயிரம் போக்குவரத்து ஓய்வூதியர்களின் உணர்வுகளை தமிழ்நாடு முதல்வர் கவனத்தில் கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்துவது போன்ற தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10.1.2023 -ஆம் தேதி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி நடைபெறும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை தஞ்சாவூர் கோட்ட அலுவலகம், கரந்தை பணிமனை முன்பு காலை 10 மணிக்கு நடத்துவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியர்களும் சங்க பேதமின்றி பங்கேற்று மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச்செய்ய பேரவைக் கூட்டத்தில் வேண்டுகோள் விடூக்கப்பட்டது.