கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் கிராமத்தில் கல் குவாரிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் டி.என்.பாளையத்தில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் கிராமத்தில் சுமார் 2.95 ஹெக்டேர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கல்குவாரி செயல்பட்டு வந்தது.
இந்த கல் குவாரிக்கான அனுமதி காலம் கடந்த 2021-ஆம் ஆண்டு முடிவுற்ற நிலையில், கல் குவாரி தொடர்ந்து இயங்க தனியார் சார்பில் விண்ணப் பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் தனியார் மண்டபத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கோபி கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினி தலைமையில், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் உதயகுமார், கோபிச்செட்டிபாளையம் வட்டாட்சியர் ஆசியாபேகம், மாவட்ட சுற்றுச்சூழல் உதவிபொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட அதிகரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்களிடம் கல் குவாரிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பேசுகையில் கல்குவாரி யில் வெடி வைப்பதால் விளைநிலங்கள் வீடுகள் பாதிப்பு ஏற்படுவதாகவும் கல்குவாரி கல்குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
கூட்டத்திற்கு வந்த மற்றொரு தரப்பினர் கல்குவாரியால் வேலைவாய்ப்பு கிடைப்பதால் கல்குவாரிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
மேலும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் பொதுமக்கள் கருத்துகள் அனைத்தும் முழுவதுமாக வீடியோ பதிவு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் அதற்குப் பிறகு அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.