Close
செப்டம்பர் 20, 2024 1:24 காலை

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிறப்பு சிகிச்சைக்கு உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சிறுமி

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சிறுமி நன்றி தெரிவித்தார்.

சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜீவ், மாநகராட்சி துப்புரவு தொழிலாளி கோகிலா தம்பதியின் மகள் ஹர்ஷினி ( 9). கடந்த சில நாட்களுக்கு முன்பு எழும்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி, தனது தந்தையின் தோளில் அமர்ந்திருந்த ஹர்ஷினி, தாத்தா.. சென்று வாருங்கள் தாத்தா…. என்று கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பதிலுக்கு கை அசைத்து காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் சிறுமிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிலையில், சிறுமி ஹர்ஷினிக்கு ‘ஹீமோபிலியா’ என்ற அரிய வகை ரத்தம் உறையா நோய் இருப்பது குறித்த வீடியோ ஒன்றும் வெளியானது. அவருக்கு உடலில் சிறிய காயம் ஏற்பட்டாலே ரத்தம் நிற்காமல் வெளியேறும் என்று அந்த வீடியோவில் அவரது பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஹர்ஷினி மற்றும் அவரது பெற்றோரை தனது இல்லத்துக்கு வரவழைத்து விவரங்களை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து, ஹர்ஷினிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சிறுமி ஹர்ஷினி சந்தித்து, தனக்கு தொடர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதற்காக நன்றி தெரிவித்தார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹர்ஷினியின் பெற்றோர் ராஜூ மற்றும் கோகிலா உடனிருந்தனர். இதையடுத்து  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறுமி ஹர்ஷினி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கான ஏற்பாடுகளை  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top