Close
செப்டம்பர் 20, 2024 3:55 காலை

புதுகை ஸ்ரீபாரதி மகளிர் கலைக் கல்லூரியில் தில்லையாடி வள்ளியம்மை-கஸ்தூரிபா காந்தி நினைவு நாள்

புதுக்கோட்டை

புதுகை பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த தில்லையாடி வள்ளியம்மை-கஸ்தூரிபா காந்தி நினைவு தினக்கூட்டம்

புதுக்கோட்டை கைக்குறிச்சி, ஸ்ரீபாரதி கலை அறிவியல் மகளிர் கலைக்கல்லூரி, வாசகர் பேரவை, புதுக்கோட்டை இணைந்து நடத்திய தில்லையாடி வள்ளியம்மை-கஸ்தூரிபா காந்தி நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வுக்கு, ஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரி தலைவர் குரு.தனசேகரன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் செ.கவிதா முன்னிலை வகித்தார்.
சிறுகதை ஆசிரியரும் வாசகர் பேரவை ஆலோசனைக்குழு உறுப்பினருமான சத்தியராம்ராமுக்கண்ணு பங்கேற்று பேசியதாவது:

மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய தில்லையாடி வள்ளியம்மை உயிர்த்தியாகம் செய்த 125 -ஆவது ஆண்டு இந்த ஆண்டு. 1914 -ஆம் ஆண்டு பிப்ரவரி 22 -ஆம் நாள் அவர் உயிர்த்தியாகம் செய்தபோது அவருக்கு வயது 16. காந்தியின் சத்தியாக்கிர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்று, அங்கே சரியான உணவு கிடைக்காததாலும், கடுமையான வேலையாலும் வெளியே வரும்போது வள்ளியம்மை எலும்புக்கூடாக் காட்சியளித்தார்.

“தான் சிறை சென்றதில் எந்த வருத்தமும் இல்லை. மீண்டும் சிறை செல்ல தயாராக இருப்பதாகவும், சிறையில் இறக்க நேரிடினும் தாய்நாட்டின் மானத்தை காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்வது பெரும்பாக்கியம் என்று கருதுவதாகவும் “காந்தியிடம் கூறிய சில நாட்களில் வள்ளியம்மை உயிர்நீத்தார்.’வள்ளியம்மை உடல் மறைந்தாலும் அவர் பெயர் நிலை பெற்றுவிட்டது.

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக சரித்திரம் உள்ளவரையில் வள்ளியம்மையின் பெயர்நிலைபெற்றிருக்கும்’என்று காந்தி தனது தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் நூலில் குறிப்பிடுகிறார். காந்தியின் ” குரு” என்று வள்ளியம்மையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். .
வள்ளியம்மையின் தியாகமும், துணிவும், மன உறுதியும் ஒவ்வொரு பெண்களுக்கும் இருக்க வேண்டும். அவரின் தியாகத்தை உங்களைப் போன்ற இன்றைய இளம் தலை முறையினர் அறியவேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த கூட்டம் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

புதுக்கோட்டை
கைக்குறிச்சி பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்விவ் பேசுகிறார், வாசகர் பேரவை செயலர் சா. விஸ்வநாதன்

வாசகர் பேரவைச் செயலர் பேராசிரியர் சா.விஸ்வநாதன் பேசியதாவது: 13 வயதில் திருமணமாகி, 15 வயதிலிருந்து 31 வயதுக்குள் 5 குழந்தை களுக்குத்தாயாகி (முதல் குழந்தை 3 நாளில் இறந்துவிட்டது), 37 வயதில் காந்தியின் விருப்பத்தின்பேரில் பிரம்மச்சரியம் பூண்டு தவ வாழ்க்கை வாழ்ந்தவர் கஸ்தூரிபா . காந்தியைக் கொண்டாடும் அளவிற்கு கஸ்தூரிபாவைப் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை.

ஆனால் சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியதில் கஸ்தூரிபாவிற்கு பெரும் பங்குண்டு.”என்னுடைய அகிம்சை வழிக்கு அவள்தான் ஆசிரியை” என்கிறார் காந்தி.

“மறு பிறவியில் என்னுடைய வாழ்க்கை துணைவியாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைத்தால் கஸ்தூரிபாவையே வரிப்பேன்.என்னுடைய ஒவ்வொரு பிறவியினும் கஸ்தூரிபாவே வாழ்க்கைத்துணையாக கிடைக்க இறைவன் அருள வேண்டும்” என்று இறைவனிடம் வேண்டுகிறார் காந்தி.

கஸ்தூரிபா நல்ல மனைவியாக, தாயாக, பொருமையின் சிகரமாக சிறந்து விளங்கியிருக்கிறார். பயமற்றவராகவும், தன்னுடைய மனதில் பட்டதை தைரியமாக பேசும் ஆற்றலை யும் பெற்றிருந்தார். அவரின் குணாதிசயங்களை இன்றைய தலைமுறை ஏற்றுக்கொண்டு கடைபிடித்தால் நல்ல சமுதாயம் உருவாகும் என்றார் விஸ்வநாதன்.

நிகழ்வில் கவிஞர் நிலவைப்பழனியப்பன்  பேசுகையில், பெண்ணினத்தின் பெருமைகளை எடுத்துக் கூறினார்.

நிகழ்வில் தமிழ்த் துறைக் தலைவர் பூர்ணிமா மற்றும் ஏராளமான பேராசிரியர்களும் மாணவிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் மதிப்புரை வழங்கிய மாணவிகளுக்கு நூல்கள் பரிசளிக்கப்பட்டது. முன்னதாக தமிழ் உதவிப் பேராசிரியர் உஷாநந்தினி  அனைவரையும் வரவேற்றார். தமிழ் உதவிப் பேராசிரியர் கலாவதி தொகுத்துவழங்கினார். நிறைவாக வரலாற்றுத்துறைத் தலைவர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top