மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்ககத்தின் சார்பில் துளிர் அறிவியல் திறனறித் தேர்வு-2023 நடைபெற்றது
புதுக்கோட்டை ஒன்றியம் மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற துளிர் அறிவியல் திறனறித் தேர்வினை இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் 52 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இத்துளிர் தேர்வினை இப்பள்ளியிலிருந்து ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு முடிய உள்ள அனைத்து மாணவர்களும் தேர்வில் கலந்து கொண்டு மாநிலத்தில் முதல் மற்றும் சிறந்த மதிப்பெண்களை பெற்று அறிவியல் அறிஞர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பையும் கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் பெற்றுள்ளனர்.
நிகழாண்டில் நடைபெற்ற இத்தேர்வை பள்ளியின் தலைமை ஆசிரியை சீத்தாலட்சுமி, பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மகேஸ்வரன் கண்காணிப்பாளராக இருந்து நடத்தினர். இத்தேர்வினை அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் துளிர் அறிவியல் புத்தகமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .
தேர்வு குறித்து மாணவர்கள் கூறியதாவது:இத்தேர்வானது சிந்திக்கும் வகை வினாக்கள் அதிகம் இடம் பெற்றுள்ளது என்றும், பொது அறிவு, கணிதம், அறிவியல் தொழில் நுட்ப கேள்வி எளிமையாக இருந்ததாகவும், என்எம்எம்எஸ் தேர்வு எழுதும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரி தேர்வாக அமைந்துள்ளதாவும், நீண்ட நாட்களுக்கு பிறகு தேர்வு எழுதுவதால் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் சரவணன், ஜெயந்தி, இந்திரா, ஜெயலட்சுமி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் செயல்பாடுகள்..
அறிவியல் மக்களுக்கே..அறிவியல் நாட்டிற்கே.. அறிவியல் சுய சார்பிற்கே.. என்ற கோட்பாடுகளுடன் தமிழ்நாடு அறிவியல் இயங்கி வருகிறது.
விஞ்ஞானிகள், பல்கலைக் கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு, தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள், பெண்கள், மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புவதை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்..
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரசாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது.
மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம், வளர்ச்சிப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம், அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது.
மத்திய அரசின் தேசிய அறிவியல், தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.