Close
செப்டம்பர் 19, 2024 11:16 மணி

வேங்கைவயல் விவகாரம்.. குற்றவாளி களைக் கைது செய்யக்கோரி சிபிஎம்எல் மக்கள் விடுதலை ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சை ரயிலடி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம்எல் மக்கள் விடுதலை

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வவியுறுத்தி  சிபிஎம்எல் மக்கள் விடுதலை தஞ்சை மாவட்டக் குழு சார்பில் தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில்(பிப்.27) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கழித்த சாதி ஆதிக்க சக்திகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்வதில் காலாதாமதம், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பிறகும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யாமல், பட்டியலின மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள துன்புறுத்தும் செயலைக் கண்டித்தும்,

காவல்துறைக்கு தலைமைப் பொறுப்பாக உள்ள தமிழ் நாடு முதல்வர் உடனடியாக தலையிட்டு வேங்கை வயல் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் சிபிஎம்எல் மக்கள் விடுதலை தஞ்சை மாவட்டக் குழு சார்பில் நேற்று  தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம்எல் மக்கள் விடுதலை தஞ்சை மாவட்ட செயலாளர் இரா.அருணாசலம் தலைமை வகித்தார். மக்கள் விடுதலை மாவட்ட நிர்வாகிகள் மருத.செல்வராஜ், ஆர். வெள்ளைச்சாமி எஸ்.பி. மனோகரன், அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநில பொதுச் செயலாளர் கசி.விடுதலைக்குமரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:

 இன்னும் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் சில மனித குல விரோதிகள் சாதி ஆதிக்க வெறியோடு பட்டியல் சாதி மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் திட்டமிட்டு மலம் கழித்த குற்ற செயல் நடந்ததை தமிழ் உலகம் நன்கு அறியும்.

இந்த ஈனச் செயல்,  பட்டியல் சாதி மக்களுக்கு ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட அவமானம் அல்ல.மாறாக தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சமூகத் திற்கும் ஏற்பட்ட அவமானமாகும். தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்கின்ற வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசாங்கம் சுமார் இரண்டு மாத காலங்கள் ஆகிவிட்ட பின்னரும் கூட இன்று வரையில் குறிப்பிட்ட சாதி ஆதிக்க வெறியர்களை கைது செய்யவில்லை.

இது தமிழ்நாடு அரசாங்கத்தின் சாதி ஆதிக்க மனோபாவத்தை மீண்டும் நிரூபணம் செய்யக்கூடிய விடயமாகவே பார்க்க வேண்டி இருக்கின்றது. ஏனெனில் குற்றம் இழைக்கப்பட்டு ஒரு மாதம் கடந்து போன நிலையில் உள்ளூர் காவல்துறையிடம் இருந்து வழக்கை சிபிசிடிக்கு மாற்றும் நிலை ஏற்பட்டது.

அதற்கு காரணம் உள்ளூர் காவல்துறை குற்றவாளிகளை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட பட்டியல் சாதி இளைஞர்களை குறி வைத்து அச்சுறுத்தி அவர்கள் மீது பழியை போட்டு குற்றவாளியாக்க முயற்சித்தேயாகும்.

இதன் பின்னர் புதுக்கோட்டையில் மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் , சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் , காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் காவல்துறையின் தவறான அணுகுமுறை குறித்து மனு அளித்ததோடு வழக்கை சிபிசிஐடி -க்கு மாற்ற வலியுறுத்தினோம். மறுநாளே அதாவது ஜனவரி 14 -ஆம் தேதி வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப் பட்டது.

ஆனால் தற்போது சிபிசிஐடி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையிலும் கூட குற்றவாளிகளை கைது செய்யவில்லை. அதோடு மட்டுமின்றி உள்ளூர் காவல்துறை எவ்வழியில் பயணித்ததோ அந்த வழியிலேயே அதாவது பட்டியல் சாதி இளைஞர்களையே குற்றவாளியாக்கும் முயற்சியில் அச்சுறுத்தல் கொடுத்து வருவதை மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இதற்கான காரணம் என்ன? என்ன நெருக்கடி காவல் துறைக்கு ஏற்பட்டிருக்கின்றது? ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு அடுத்தபடியாக உலக அளவில் மிகச்சிறந்த காவல்துறை தமிழ்நாடு காவல்துறை தான் என்று மார் தட்டிக் கொண்டிருக்க கூடிய தருணத்தில்,. தமிழ்நாடு காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யாமல் கையறு நிலையில் இருப்பது கண்டிக்கத்தக்கது.

இல்லை வேறு ஏதேனும் நிர்பந்தம் காரணமா? ஏன் குற்றவாளிகளை இதுவரையில் கைது செய்யவில்லைஃ?அல்லது கைது செய்ய முடியவில்லை?என்பதற்கான விளக்கத்தை காவல்துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கக்கூடிய முதலமைச்சர் ஸ்டாலின்  விளக்க வேண்டும்.

ஆனால் இன்று வரையில் இந்த பிரச்னையில் உரிய கவனத்தை முதலமைச்சர் செலுத்தவில்லை என்றே தோன்றுகின்றது. அதனால் தான் உள்ளூர் காவல்துறை எவ்வழியில் சென்றதோ அதே தவறான அணுகுமுறையை சிபிசிஐடியும் எடுத்து வருகிறது என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம்.

உள்ளூர் அரசியல் நெருக்கடி காரணமாக காவல்துறை இப்படி நடந்து கொள்கின்றதா? அல்லது முதலமைச்சர் இப்படி வழி காட்டுகின்றாரா? பின்னணி என்ன? இந்த நிலைமை ஏன் நீடிக்கின்றது? என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் இருக்கின்றது, உடனடியாக நடவடிக்கை எடுத்து உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப் படுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றார் க.சி. விடுதலைக்குமரன்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிர மணியன்,மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், மாவட்ட செயலாளர் தேவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் என்.குருசாமி, மக்கள் கலை இலக்கிய கழக மாநில இணைப் பொதுச் செயலாளர் ராவணன்,

இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், எழுத்தாளர் சாம்பான், தமிழ் தேச மக்கள் முன்னணி மாநகரச் செயலாளர் ஆலம்கான், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் எம்.பி.நாத்திகன், ஜனநாயக விவசாய சங்கத்தின் மாவட்ட நிர்வாகி பி.ஜோதிவேல் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள். இறுதியில் சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெ.பாஸ்கர் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top