Close
நவம்பர் 10, 2024 7:34 காலை

உலக மகளிர் நாள்… துப்புரவுப்பணியாளர்களுக்கு புதுகை நகராட்சி தலைவர் வாழ்த்து

புதுக்கோட்டை

உலக மகளிர் தினத்தையொட்டி துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி வாழ்த்து தெரிவித்த புதுகை நகர் மன்றத்தலைவர் திலகவதிசெந்தில். உடன் ஆணையர் நாகராஜன்

உலக மகளிர் நாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் பெண்  தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு மற்றும் புடவைகளை வழங்கி  மகளிர் தின வாழ்த்துகளை  நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 -ஆம் தேதி அன்று, சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப் படுகிறது.

தமிழகம் முழுவதும் இன்று உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு அரசு சார்பிலும் பல்வேறு தனியார் கல்லூரிகள் தனியார் தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகள் சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக மகளிர் தினத்தில் பல்வேறு சாதனைகள் செய்த பெண்களை கௌரவிக்கும் விதத்தில் தமிழக அரசு சார்பில் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி  கௌரவப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பெண்களை கௌரவிக்கும் விதத்தில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் நகரப் பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபடும் 180 பெண்களுக்கு சேலை மற்றும் இனிப்புகளை வழங்கி, கைகுலுக்கி  உலக மகளிர் தின வாழ்த்துகளை  தெரிவித்தார்.

மகளிர் எதையும் சாதிக்கக்கூடிய  மன தைரியத்தை கொண்டவர்கள் தமிழக அரசு மகளிர்க்காக இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்து பெண்களை கௌரவப்படுத்தி உள்ளது. அதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர்க்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று பணியாளர்களுக்கு மகளிர் தின  வாழ்த்து செய்தியைக்கூறினார்.

இதைத் தொடர்ந்து நகர் மன்ற தலைவர் திலகவதி தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து பேருந்து நிலையத்தில் குப்பைகளை பெருக்கி தூய்மை பணியில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையர் நாகராஜன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top