Close
செப்டம்பர் 20, 2024 5:57 காலை

தமிழ் மொழியின் இனிமை, நமது பண்பாட்டின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

புதுக்கோட்டை

புதுகை ஜெஜெ கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வில் பேசுகிறார், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

தமிழ் மொழியின் இனிமையையும், நமது பண்பாட்டின் பெருமையையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது தலையாய கடமையாகும் என்றார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில், தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் (09.03.2023) நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில், கேள்வி-பதில் நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சான்றிதழ் மற்றும் பாராட்டு கேடயங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு  பேசியதாவது: யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றார் முண்டாசு கவிஞர் பாரதி.  அப்படிப்பட்ட இனிமையான தமிழ் மொழியின் இனிமையையும், நமது பண்பாட்டின் பெருமையையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது தலையாய கடமையாகும். அதிலும் குறிப்பாக, இளைஞர்களிடையே கொண்டு  சேர்ப்பது என்பது மிகவும் அவசியமாகிறது.

மொழி மீதும், பண்பாட்டின் மீதும் மதிப்பும், மரியாதையும் கொண்ட சமூகம் ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்கும் சமூகமாக உயர்ந்திருக்கும். அதன்படி நமது தாய் மொழியாம் தமிழின் தொன்மை குறித்தும், அவற்றின் சிறப்பு குறித்தும், தமிழர்களின் மரபு நாகரீகம் குறித்தும்,

சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், தொல்லியல் ஆய்வுகள், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, பெண் கல்வி மற்றும் அரசின் திட்டங்கள், அதனை செயல் படுத்தும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ், ஆகச்சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு பங்கேற்க வருகை தந்துள்ள அனைவருக்கும் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த வழிகாட்டி புத்தகமும், தமிழ் பெருமிதம் குறித்த புத்தகமும் வழங்கப் பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் இவற்றை முழுமையாக படித்து பயன்பெற வேண்டும். மேலும்மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வில் தெரிவிக்கப்பட்ட தமிழ் மொழியின் சிறப்பு குறித்த கருத்துகளை நீங்கள் கேட்டு பயன்பெறுவ துடன், உங்களின் சக நண்பர்களிடமும் தெரிவிக்க வேண்டும்.

புதுக்கோட்டை
மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வில் மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் கவிதா ராமு

மேலும் தமிழக அரசின் சார்பில், நான் முதல்வன் திட்டம், உயர்கல்வி, வேலை வாய்ப்பு, வங்கி கடன் உதவி, தொழில் வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வேலைவாய்ப்பு குறித்த கண்காட்சி அரங்குகளை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றார்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் அருணன்  பங்கேற்று ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” எனும் தலைப்பில் பேசியதாவது, தமிழ் மொழி செம்மொழி, அது 8 கோடி பேர் பேசும் மக்கள் மொழியாக உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக உள்ள மொழி தமிழ் மொழியாகும்.

இந்தியாவில் சுமார் 1 லட்சம் கல்வெட்டுகள் கண்டறியப் பட்டுள்ளது. இதில் 60,000 கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டவை. அதில் 57,000 கல்வெட்டுகள் தமிழ் மொழி கல்வெட்டுகளாகும். சங்க இலக்கியத்தில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளவை அனைத்தும் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளது.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்காவது காணோம் என்ற வரிகளை மனதில் கொண்டு பாரதியார், கவிஞர் கண்ணதாசன் ஆகியோரின் கவிதைகளை இளைஞர்கள் படிக்க வேண்டும்.

தமிழக அரசு பொறியியல் படிப்பினை தமிழ் வழியில் கொண்டு வந்துள்ளது சிறப்பானதாகும். இந்த நிகழ்ச்சியினை நடத்துவதற்கு காரணமாக அமைந்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சருக்கு  நன்றி பாராட்டுறேன் என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் கி.பார்த்திபராஜா பங்கேற்று  ‘கலைகள் போற்றிய தமிழ்நாடு” எனும் தலைப்பில் பேசுகை யில்,  நேர்த்தியாக செய்யக்கூடிய எந்த செயலும் ஒரு கலை யாகும். கலைகளில் சிறப்பானதொரு கலை நாடகக்கலை. புதுக்கோட்டை மண் நாடக கலையினை போற்றி வளர்த்த மண்.  சிவப்பிரகாச சுவாமி அவர்களை பாதுகாத்த மண். தமிழர்கள் கலைகளை போற்றியவர்கள். சங்க இலக்கியங் களில் கலைஞர்கள் பற்றிய குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

நம் முன்னோர்கள் உருவாக்கிய கலையினை நாம் மதித்து போற்ற வேண்டும். சிவப்பிரகாச சுவாமிகள், காதர் பாட்சா, விஸ்வநாத தாஸ் உள்ளிட்ட பலர் தங்களது சிறப்பான நடிப்பின் வாயிலாக சுதந்திரப் போராட்ட வேட்கையினை மக்களிடம் உருவாக்கி சுதந்திரம் பெற காரணமாக இருந்தார்கள்.

கலையும், இசையும், மதம், மொழி, இனத்திற்கு அப்பாற்பட்ட தாகும். நாடகக்கலை, சினிமாக்கலை, தெருக்கூத்து, வில்லுப் பாட்டு இதில் எந்தக்கலை சிறப்பான கலை என்பதனை இளைஞர்கள் பிரித்துணர்ந்து முக்கியத்துவம்  அளிக்க  வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் .மா.செல்வி, கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி,

மாவட்ட சமூக நல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top