Close
நவம்பர் 22, 2024 7:30 காலை

பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்கு தயங்கக் கூடாது

புதுக்கோட்டை

தமுஎகச சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் பேசுகிறார், திருச்சி டிஎஸ்பி லில்லி கிரேஸ்

தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து புகார் செய்ய  பெண்கள் காவல்நிலையம் செல்வதற்கோ புகார் அளிப்பதற்கோ கொஞ்சமும் தயங்கக் கூடாது என்றார் காவல்துணைக் கண்காணிப்பாளர் லில்லிகிரேஸ்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மகளிர் கிளை சார்பில் மகளிர்தினக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக  திருச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ்  பங்கேற்று பேசியது:

பெண்களின் பாதுகாப்புக்கென்று சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஒரு ஆண் தவறான எண்ணத்துடன் பின்னால் வந்தாலோ, பார்த்தாலோ கூட , அது குறித்து புகார் அளித்தால் மூன்று வருடங்கள்வரை தண்டனை பெற்றுத்தர முடியும்.

பெண்கள் காவல்நிலையம் செல்வதற்கோ புகார் அளிப்பதற்கோ கொஞ்சமும் தயங்கக் கூடாது. பெண்கள் மௌனம் காப்பதென்பது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு நாமே இடங்கொடுத்தாய் ஆகிவிடும்.

பெண்கள் அடுத்தவர்களுக்காக குரல்கொடுக்கிறீர்களோ இல்லையோ தங்களுக்காக தாங்களே குரல்கொடுக்க கொஞ்சமும் தயங்கக் கூடாது. பெரிய அளவில் ஊடகங்களில் வெளிவந்து நம்மை அதிர்ச்சியுறச் செய்த ஒரு பாலியியல் குற்றத்தின் விசாரணையில் அந்த குற்றவாளி அதற்கு முன் அறுபதுக்கும் மேற்பட்ட அதுபோன்ற  பாலியல் வன்முறைக ளில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. முதல் குற்றத்திலேயே அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தால் அத்தனை  பெண்களையும் காப்பாற்றியிருக்கலாம் என்றார் அவர்.

கருத்தரங்கிற்கு கிளைத்தலைவர் அ.மணிமேகலை ஜெயராமன் தலைமை வகித்தார்.  மாவட்டத்தலைவர் ராசி.பன்னீர்செல்வன், செயலாளர் ஸ்டாலின்சரவணன், மருத்துவர் மணிமலர்  உள்ளிட்டோர் பேசினர்.

இதையொட்டி காந்திநகர் தொடக்கப்பள்ளி மாணவிகளின் நடனநிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கிளைத்தலைவர் சாந்திநாகமுத்து வரவேற்றார்.  பொருளாளர் த.ரஞ்சனி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top