தேசிய கடல்சார் தினத்தை யொட்டி சென்னைத் துறைமுகத்தில் கருத்தரங்குகள் நடைபெற்றன.
இந்தியாவிலிருந்து முதன் முதலாக அன்றை பம்பாய் (மும்பை) துறைமுகத்திலிருந்து பிரிட்டன் நாட்டின் லண்டன் துறைமுகத்திற்கு எஸ்.எஸ். லாயல்டி என்ற சரக்குக் கப்பல் ஏப்ரல் 5-1919 அன்று தனது முதல் பயணத்தை தொடங்கியது.
இதனை நினைவு கூறும் வகையில் தேசிய கடல்சார் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல்.5 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புதன்கிழமை தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுவதையொட்டி சென்னைத் துறைமுகம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தலைமையில் நடைபெற்ற இக்கருந்தரங்கத்தில் நாட்டின் தொழில் வளர்ச்சி, பொருளார வளர்ச்சியில் கடல்சார் வணிகத்தின் பங்கு, துறைமுகங்களின் முக்கியத்துவம், மாலுமிகள், கடல்சிப்பந்தி களின் அர்ப்பணிப்பு பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக பலரும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
மறைந்த மாலுமிகளுக்கு அஞ்சலி:
வணிகக் கப்பல்கள் போக்குவரத்து இயக்குனரகம் சார்பில் தேசிய கடல்சார் தின சிறப்பு நிகழ்ச்சி சென்னைத் துறைமுக வளாகத்தில் உள்ள மாலுமிகள் சங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி எஸ்.வெங்கடராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இங்குள்ள நினைவுத் தூணில் மலர்வளையம் வைத்து பணியின்போது இறந்து போன மாலுமிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.