Close
நவம்பர் 25, 2024 11:04 காலை

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தனியார் மய நடவடிக்கைகள் கைவிட வேண்டும்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற ஏஐடியுசி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் 37 வது ஆண்டு பேரவை கூட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமைப்பணி டெண்டர் விடுவது உள்ளிட்ட அனைத்து வித தனியார் மய நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும்.

தஞ்சையில் இன்று நடைபெற்ற ஏஐடியுசி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் 37 வது ஆண்டு பேரவை கூட்டம்  தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது.

பேரவை கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் அ.சாமிக்கண்ணு தலைமை வகித்தார். ஏ ஐ டி யு சி மாநில செயலாளர் ஆர். தில்லைவனம் 37-வது பேரவை கொடியினை ஏற்றி வைத்தார்.  மாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.தியாகராஜன் வரவேற்றார்.

சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் வேலை அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார்.

பேரவை கூட்டத்தின் தீர்மானங்களை சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளர்கள் ஜெ.குணசேகரன், கே. ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிந்தனர்.

37 வது பேரவை கூட்டத்தில் சங்க உறுப்பினர்களாக பதிவு செய்து இறந்து போன 13 தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் பத்தாயிரம் வீதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

பேரவையினை வாழ்த்தி விவசாய சங்க தலைவர் முத்துஉத்தராபதி, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அ.பாரதி, வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் க.அன்பழகன்,. விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.பக்கிரிசாமி.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் வீர மோகன். மூத்த தலைவர் ஜி.கிருஷ்ணன், ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் வெ.சேவையா, அரசு போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் இரா.செந்தில்நாதன், நகரதொழிற்சங்க நிர்வாகி ஆர். பிரபாகர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்க மற்றும் சுமை சங்க நிர்வாகிகள் கே.எஸ். முருகேசன், சி.பாலையன், கே‌சரவணன், டி.ஐயப்பன், எஸ்.கணபதி , பி.அன்பழகன், கே.ராஜேந்திரன் , எம்.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேரவையில் டாக்டர். கலைஞர் .மு. கருணாநிதி  முதல்வராக இருந்த பொழுது சேவை நோக்கத்துடன் துவக்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பொது விநியோகம் மற்றும் நெல் கொள்முதல் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் அமல்படுத்துவதில் இந்தியாவிலேயே முன்னோடி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இதற்கு அடித்தளமாக அலுவலர்கள், பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அர்பணிப் புடன் பணிபுரிந்து தமிழ்நாடு அரசுக்கு பெருமை சேர்த்து வரும் நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அனைத்து பணிகளிலும் தனியார்மய நடவடிக்கை கள் மிக தீவிரமாக செயல்படுத்த முனைப்பு காட்டப்பட்டு வருவதை தமிழ்நாடு அரசும் , வாணிப கழக நிர்வாகமும் கைவிட வேண்டும்.

நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் சுமைதூக்கும் பணியாளர்கள், துப்புரவாளர்களுக்கு மாற்றாக டெண்டர் விடப்படுவதை பேரவை கண்டனம் செய்வதுடன் நீண்ட காலமாக பணிபுரிந்து வருகிற தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கின்ற டெண்டர் விடும் முறையை கைவிட வேண்டும்.

தற்போது செயல்பட்டு வருகின்ற நவீன அரிசி ஆலைகளில் தனியாரை விட அரவை செய்வதற்கு அனைத்து நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகள் உள்ள நிலையில் , புதிதாக நவீன அரிசி ஆலைகளை கட்டி தனியாருக்கு விடும் முடிவு தேவையில்லை என்பதை,  அரசுக்கும் சுட்டிக்காட்டு வதுடன், தனியாருக்கு வழங்கும் முடிவை கைவிட வேண்டும்.

கொள்முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி ஏற்றப்பட்டுள்ள நிலையில், நவீன அரிசி ஆலைகள் ,சேமிப்பு நிலையங்களில் பணிபுரிகின்ற சுமை தூக்கும் தொழிலாளர் களுக்கு கூலி ஏற்றப்படவில்லை, இந்திய உணவுக் கழக தொழிலாளர்களுக்கு இணையாக கூலி உயர்வை உயர்த்தி தரவேண்டும்.

சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலையின் தன்மை, வேலை ,சுமை உள்ளிட்டவைகளை கணக்கில் கொள்ளாமல் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தொழிலாளர்கள் பணி புரிய வேண்டும் என்ற நிபந்தனையை நிர்வாகம் கைவிட வேண்டும்.

நீண்ட காலமாக உழைத்து வருகின்ற சுமை தூக்கும் தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கையை கருதி, அவர்களுக்கு நீண்ட கால கோரிக்கையான வருங்கால வைப்பு நிதி திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.

வார விடுமுறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமும், தேசிய பண்டிகையில் பணிபுரிந்தால் மும்மடங்கு சம்பளமும் வழங்கப்பட வேண்டும், பிரதி மாதம் 5 ம்தேதி சம்பளம் வங்கி கணக்கில் ஏற்றப்பட வேண்டும், அதற்குரிய சம்பள விபர ரசீது வழங்கப்பட வேண்டும்.

அனைத்து சுமைதூக்கம் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், அனைத்து கொள்முதல் நிலை யங்களிலும் குடிநீர் வசதி, கழிவறை வசதி ,நெல் மூட்டைகள் கொண்டு வந்து ஏற்றி, இறக்கி செல்வதற்குரிய சாலை வசதி கள் செய்து தரப்பட வேண்டும்.

பணியின் போது விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட தொழிலா ளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்ட அளிக்க வேண்டும், மருத்துவ செலவுகளை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top