அரசு உயர் அதிகாரிகளின் கையெழுத்தை பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாக மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து இழந்த தொகையை மீட்டுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் ஜெரால்டு என்கிற சசிகுமார்(35). இவர் வறுமையில் வாடும் இளைஞர்கள், இளம் பெண்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தலைமைச் செயலாளர் இறையன்பு , அமுதா , உமா மகேஸ்வரி, மகிழ்மதி எஸ், ஜெயந்தி , அகிலாண்டேஸ்வரி போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் போலி கையெழுத்து மற்றும் தமிழ்நாடு அரசு முத்திரையைப் பயன்படுத்தி போலி பணி ஆணைகளை வழங்கியுள்ளார்.
இதன் மூலம் இதன்மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கோடிக்காணக்கான ரூபாய் வசூல் வேட்டை நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ரூ.80 லட்சம் அளவுக்கு வசூலித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டக்குழு சார்பிலும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புகார் மனு அளிக்கப்பட்டு 10 நாட்களைக் கடந்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்தும், உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தியும், இழந்த தொகையை மீட்டுத்தரக் கோரியும் ஏப்.17 அன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை ஊர்வலமாகச் சென்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் பதிக்கப்பட்ட மக்களும், கட்சியினரும் குவிந்தனர்.
இந்நிலையில், மேற்படி மேசடி செய்த நபரை தனிப்படை அமைத்து காஞ்சிபுரத்தில் வைத்து கைது செய்துள்ளதாகவும், அவரை புதுக்கோட்டைக்கு அழைத்துக் கொண்டு வந்திருப்பதாகவும் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறியதாவது,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் கவிவர்மன்
அரசு உயர் அதிகாரிகளின் பெயரில் போலி பணி ஆணை வழங்கி மோசடி செய்த செயல் மிகவும் கண்டிக்கத் தக்கது.
புகார் மனு அளித்து 10 நாட்களுக்கும் மேலாகியும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட பிறகுதான் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
காவல்துறை குற்றவாளியை கைது செய்ததோடு கடமை முடிந்துவிட்டது என்று நின்றுவிடக்கூடாது. குற்றவாளி சசிக்குமார் என்ற ஜெரால்டு மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி நபரின் சொத்துகள் மற்றும் வங்கிக்கணக்குகளை முடக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட இழந்த தொகையை முழுமையாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கவிவர்மன்.
பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாரைச் சந்தித்தும் மேற்கண்ட கோரிக்கை குறித்து வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், ஜி.நாகராஜன், த.அன்பழன், சு.மதியகழன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பொன்னுச்சாமி, எல்.வடிவேல், என்.பக்ருதீன், டி.சலோமி, பி.சுசீலா, ஆர்.சோலையப்பன், அ.மணவாளன், டி.லட்சாதிபதி, எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.