புதுக்கோட்டையில் தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் தீயணைப்புத்துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தீயணைப்புத்துறை சார்பில் ஏப்ரல் 14 -ஆம் தேதி முதல் 20 -ஆம் தேதி வரை தீத்தொண்டு வாரவிழா அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி கடந்த 14 -ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலர் இ. பானுப்பிரியா தலைமையில், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் பி. கார்த்திகேயன் முன்னிலையில், புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் உள்ள நினைவு தூணில், பணியின்போது உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை தீயணைப்புத்துறை சார்பில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம், அண்ணாசிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம் கார்னர், புதிய பேருந்து நிலையம் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விநியோகித்தனர்.
இந்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தில் எளிதில் தீப்பற்றி எரியும் பொருட்களை வீடுகளில் சேமித்து வைக்க கூடாது. மின்சார தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட மின் வயர்களை பயன் படுத்த வேண்டும். கடைகள், அலுவலகங்கள் மற்றம் வர்த்தக நிறுவனங்களை மூடும்போது பலமுறை கவனத்துடன் பார்வையிட்டு மின் இணைப்பு துண்டித்து விட்டு மூட வேண்டும். கடை பாதுகாப்பிற்கு இரவில் ஒரு காவலரை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கி இருந்தன.
இதையடுத்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பொது மக்கள் முன்னிலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயை அணைக்கும் வழிகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
தீயணைப்பு மீட்பு பணிகள் துறை புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் இ பானுப்ரியா உத்தரவின்படி புதுக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் மற்றும் சிப்காட் நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஆகியோர் தலைமையில் தீத்தொண்டு நாள் வார நிறைவு நாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் மியூசியத்தில் இருந்து தொடங்கிய பேரணி பால்பண்ணை, பழனியப்பா கார்னர், கீழ ராஜவீதி , பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் நிறைவடைந்தது.