Close
செப்டம்பர் 20, 2024 3:56 காலை

புதுக்கோட்டையில் மக்கள் நீதிமன்றத்தில் பிஎஸ்என்எல் வழக்குகள் விசாரணை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற விசாரணை

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி, புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில்  மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) 21.04.2023- வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற அமர்வுக்கு செயலர் / சார்பு நீதிபதி   ராஜேந்திர கண்ணன் தலைமை வகித்து விசாரணையை தொடக்கி வைத்தார்.

சார்பு நீதிபதி(ஓய்வு) ஏ. பிச்சை, வழக்கறிஞர் பி. கலைவாணி, சமூக செயல்பாட்டாளர் பி. மகாலிங்கம் ஆகியோர்  பங்கேற்று வழக்குகளை விசாரணை செய்து தீர்வுகளை வழங்கினர்.

இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில்  வாடிக்கையாளர்கள் பில் தொகை நிலுவை தொடர்பான வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

திருச்சி பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில்  முதன்மை கணக்கு அலுவலர் ஆர். வெங்கடேஸ்வரன், கணக்கு அலுவலர்கள் பாலாஜி,  ராகவன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், பெரும்பாலும் கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்காக வாங்கப்பட்ட இணைய தள இணைப்புகளுக்கு பணம் செலுத்தாத பிரச்னை தொடர்பான வழக்குகளே இருந்தன.  இவற்றுக்கு பில் தொகையில் தள்ளுபடி சலுகையும் அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டைமக்கள் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற மக்கள்

பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் 380 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 40  வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு பெற்ற அனைவரும் நீதிமன்றம்  அறிவுறுத்திய தொகையை அங்கேயே செலுத்தி ரசீது பெற்றுச்சென்றனர்.

ஏற்பாடுகளை,  மக்கள் நீதிமன்ற அலுவலக முதுநிலை நிர்வாக அலுவலர் வி. ராஜசேகரன், இளநிலை நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top