Close
நவம்பர் 22, 2024 5:03 மணி

மாமேதை மார்க்ஸ் மட்டும்தான் இந்த உலகை மாற்றி அமைக்கமுடியும் என்பதற்கான வழியைக் கண்டறிந்தார்

புதுக்கோட்டை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற புத்தக நாள் விழாவில் பங்கேற்று தொடக்கி வைத்த சின்னதுரை எம்எல்ஏ

தமிழக அரசு கொண்டுவந்த 12 மணி வேலைநேர சட்டத்தை தடுத்து நிறுத்தியது மார்க்சியம்தான் என்றார் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை.

தமிழ்நாடு அறிவியல் இயகத்தின் சார்பில் புதுக்கோட்டையில்  நேற்று நடைபெற்ற உலக புத்தக தின விழாவில் அவர் பேசியது: ஓலைச்சுவடியில் தொடங்கிய நமது வாசிப்புப் பழக்கம் முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாக்கிராம் என நவீனத் தொழில்நுப்பங்களாக தற்பொழுது வளர்ந்து நிக்கிறது. விபரங்களைத் தெரிந்துகொண்ட எல்லோரும் அறிவாளியா? புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் அறிவு வளர்ந்துவிடுமா? மாற்றத்தைக் கொண்டுவந்துவிட முடியுமா? என்ற கேள்விகளை நாம் எழுப்பிப் பார்க்க வேண்டியுள்ளது.

உலகில் பல்வேறு தத்துவ ஆசான்கள், அறிஞர்கள், மேதைகள் தோன்றியிருக்கின்றனர். அவர்களால் இந்த உலகில் பல வளர்ச்சிப் போக்குகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், அவர்களால் மனிதனை மனிதன் சுரண்டும்; அவல நிலைக்குத் தீர்வு சொல்ல முடியவில்லை. மாமேதை மார்க்ஸ் மட்டும்தான் இந்த உலகை மாற்றி அமைக்கமுடியும் என்பதற்கான வழியைக் கண்டறிந்தார்.

பள்ளிக்கல்வியைத் தாண்டாத என்னை எனது கட்சி சட்டமன்ற உறுப்பினார் ஆக்கியது. முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழையும் முன்பாக எனக்கு சிறு அச்சம் இருந்தது உண்மை. கல்வியில் சிறந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள், மருத்துவர்கள், நீண்ட நெடிய அரசியல் பின்புலம் கொண்ட குடும்பதில் இருந்து வந்தவர்கள் என அங்கே சட்டமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக வீற்றிருந்தனர். ஐஏஎஸ் படித்த உயர்ந்த அலுவலர்கள் இருந்தார்கள்.

ஆனால், உள்ளே நுழைந்ததும் எனக்கு அந்த அச்சம் ஏற்படவில்லை. உண்மையும், நேர்மையும் இருக்கும் இடத்தில் யாருக்கும் அச்சப்படத் தேவையில்லை என்ற தைரியம் வந்தது. மார்க்சியம் என்னை வழிநடத்தியது. சட்டமன்றத்தில் அரசு கொண்டுவந்த நல்ல திட்டங்களை கூட்டணி கட்சி என்ற முறையில் மகிழ்ச்சியோடு வரவேற்றோம்.

ஆனால், 12 மணிநேர வேலைக்கான சட்டம் கொண்டு வந்தபோது அறிமுக நிலையிலேயே எதிர்த்தோம். கூட்டணியில் உள்ள பல கட்சிகளும் எதிர்த்தது. ஆனால், 8 பேர் மட்டுமே வெளிநடப்புச் செய்தோம். தொழிலாளி வர்க்கம் வெகுண்டெழுந்தது. அரசு பணிந்தது. எங்களையும் தொழிலாளர்களை வழிநடத்தியது மார்க்சியம்.

சாதியக் கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் உள்ளன. தீண்டாமைக் கொடுமையை அகற்ற ஏராளமானோர் பாடுபட்டுள்ளனர். ஆனால், கர்நாடகத்தில் இருந்து வந்த பார்ப்பன சமூகத்தில் பிறந்த சீனிவாசராவ்தான் கீழத்தஞ்சையில் அடித்தால் திருப்பி அடி என்று தலித்மக்களைத் தட்டி எழுப்பினார்.

தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக அனைத்து சமூகத்தினரையும் களத்தில் நிறுத்தி போராட கற்றுத் தந்தது மார்க்சியம். சமூக விடுதலைக்கும், பொருளாதார விடுலைக்கும் இறுதி வடிவம் மார்க்சியத்தில் மட்டுமே உள்ளது என்றார்  எம்.சின்னத்துரை  எம்எல்ஏ .

விழாவிற்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.வீரமுத்து தலைமை வகித்தார். கவிஞர் ஜீவி சிறப்புரையாற்றினார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை  விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் வரவேற்றார். பொருளார் விமலா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top