மதுரை, தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சி தொடக்க விழாவில், ரூபாய் 2 கோடியே 54 இலட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதுரை தமுக்கம் மைதானத்தில், (29.04.2023) சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மதுரை அரசுப்பொருட்காட்சி – 2023-யை தொடங்கி வைத்து அரசுத்துறை அரங்குகளைப் பார்வை யிட்டார்.
பின்னர்,அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: திருவிழா நகரான மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக, ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில் , அரசுப் பொருட்காட்சியினை மிகச் சிறப்புடன் நடத்திட திட்டமிடப்பட்டு தமுக்கம் மைதானத்தில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு அரசுப் பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்படும் 213-வது அரசுப் பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சி தொடர்ந்து 45 நாட்கள் 13.06.2023 வரை நடைபெறும்.
இப்பொருட்காட்சி மைதானத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், அரசு சார்பு நிறுவனங்களான ஆவின், மதுரை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றின் மூலம் 3 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க அந்தந்த துறைகளின் சார்பாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2022-23-ஆம் ஆண்டில் மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் என் 5 முக்கிய நகரங்களில நடத்தப்பட்ட அரசு பொருட்காட்சிகளை 7,42,150 பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். இதன் வாயிலாக ரூபாய் 3 கோடியே 7 இலட்சத்து 46 ஆயிரம் வருவாய் அரசிற்கு ஈட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுரையில் நடைபெற்ற அரசு பொருட்காட்சியில் சுமார் 1,50 லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் (1,50,282) பார்வையிட்டு பயன் பெற்றுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 54.33 லட்சம் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. பொருட்காட்சியின் மூலம் அரசுக்கு வருவாய் என்பது நோக்கமல்ல, அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பதே நோக்கமாகும்.
மேலும், செய்தித்துறையின் சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர்கள், பெருந்தலைவர்கள், மொழிப்போர் தியாகிகள் ஆகியோரின் தியாகங்களை போற்றும் விதமாக மணிமண்டபங்கள், நினைவு மண்டபங்கள், திருவுருவச் சிலைகள், நினைவுத் தூண்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், மதுரை மாநகரில் பிரபல பின்னணி பாடகர் டி எம் சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் அன்னாரது திருவுருவச் சிலை அமைக்கப்படவுள்ளது.
சிவகங்கையில், சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியார் , பெருந்துணையாக நின்ற வீரமங்கை குயிலி அவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை, வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரரான மாவீரன் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் மன்னர் பூலித்தேவர் படையில் முக்கிய தளபதியாக இருந்தவரும் சுதந்திர போராட்ட வீரருமான வென்னி காலாடி அவர்களின் நினைவை போற்றும் வகையில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் அன்னாரது திருவுருவச்சிலை, அரியலூர் மாவட்டத்தில் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி அவர்களுக்கு ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
கரிசல் இலக்கிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், நினைவரங்கம் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர்,கடந்த 14.02.2023-அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கும், மருது சகோதரர்களுக்கும், வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கும் மார்பளவு சிலை சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், செய்தித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நினைவகங்கள், மணிமண்டபங்கள், திருவுருவச் சிலைகள் தொடர்பான தகவல்களை இன்றைய இளைஞர்கள் எளிதில் தெரிந்து பயன்பெற ஏதுவாக விரைவு துலங்கள் குறியீடு (QR CODE) திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 275 மகளிருக்கு ரூ.1,20,25,000/- மதிப்பில் நிதியுதவியும், ரூ.1,23,75,000/- மதிப்பில் தலா 8 கிராம் தங்கம் வீதம் 2,200 கிராம் தங்கம்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 8 பயனாளிக ளுக்கு ரூ.6,68,000/- மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப் பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக சிறப்பாக செயல்பட்ட 9 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ”மணிமேகலை விருது” மற்றும் ரூபாய் 4 இலட்சம் மதிப்பீட்டில் ஊக்கத்தொகை என மொத்தம் ரூபாய் 2 கோடியே 54 இலட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங்,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன்,மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) , செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர்கள் தமிழ் செல்வராஜன் , இரா.பாஸ்கரன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.