Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த காவலர் உள்பட 2 பேருக்கு முதலமைச்சர் நிவாரண உதவி அறிவிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே மஞ்சுவிரட்டில் உயிரிழந்த 2 பேருக்கு நிவாரண உதவியை அறிவித்த முதலமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடுமுட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரில் நேற்று  (3-5-2023) நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியின் போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மீமிசல் காவல் நிலைய காவலர்  ஜெ.நவநீதகிருஷ்ணன்(32) என்பவரை எதிர்பாராத விதமாக மாடுமுட்டியதில் உயிரிழந்தார் என்ற செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதுஉயிரிழந்த காவலர் நவநீதிகிருஷ்ணனுடைய குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இருபது இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதே மஞ்சுவிரட்டில் மாடு முட்டி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் மற்றும் நிதியுதவி  தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கல்லூரில் (3-5-2023) நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியினை பார்த்துக்கொண்டிருந்த திருமயம் தாலுகா, கே.புதுப்பட்டியைச் சேர்ந்த க.சுப்ரமணியம்(30) என்பவர் எதிர்பாராத விதமாக மாடுமுட்டியதில் உயிரிழந்தார் என்ற செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

பொதுமக்கள் சாலை மறியல்: இதனிடையே  மஞ்சுவிரட்டில் காளை முட்டி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூரில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இங்கு மீமிசல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய காவலர்  நவநீதகிருஷ்ணன் என்பவர் அங்கு பாதுகாப்பு பணிக்காக சென்றார். பாதுகாப்பு பணியின் போது காளை முட்டியதில் படுகாயமடைந்து  உயிரிழந்தார்.  இதையடுத்து இறந்த போலீஸ்காரரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பா.ஜ.க. வினர் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை முன்பு அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் கொட்டும் மழையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவு பகலாக பணியாற்றக்கூடிய காவலர்களுக்கு சரியான முறையில் பாதுகாப்பு இல்லை. குறிப்பாக மஞ்சுவிரட்டில் பாதுகாப்பிற்கான சென்ற போலீசாருக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் நவநீதகிருஷ்ணன் இறந்திருக்க வாய்ப்பில்லை என்று மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர். மேலும், இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மறியலை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top