கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய தொழில்நுட்ப தினம் கடைபிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், முதுகுளம் ஊராட்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய தொழில்நுட்ப தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவி வாணிசரவணன் வகித்தார்.பள்ளி மேலாண்மை குழு தலைவி இன்பவள்ளி, முதுகுளம் கணித பட்டதாரி ஆசிரியர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டாரத் தலைவர் ரகமதுல்லா தேசிய தொழில்நுட்ப தினம் குறித்து பேசியதாவது: அறிவியல் சாதனைகளைக் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 11 அன்று தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது.
கடினமாக உழைக்கும் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள மற்ற அனைத்து அறிவாளர்களின் அனைத்துப் பணிகளையும் போற்றி பாராட்டும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.
தேசிய தொழில்நுட்ப தினம் ஒரு மதிப்புமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. 1998 -ஆம் ஆண்டு இதே நாளில் இராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு சோதனைகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. முன்னதாக, இந்தியா 1974 -இல் ‘புன்னகை புத்தர்’ என்ற பெயரில் இந்த அணுசக்தி சோதனை களை முயற்சித்தது இறுதியில் தோல்வியடைந்தது.
பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஏவுகணை விஞ்ஞானியுமான ஏபிஜே அப்துல் கலாம் தலைமை தாங்கினார்.
இந்த அணுச் சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு, அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் , நாட்டின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கொண்டாடும் வகையில் மே 11ஆம் தேதியை தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கரும்பொருளை மையமாக வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை” ஆகும் என்று பேசினார். இந்நிகழ்வில் வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி, இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் ஆர்த்தி ,சத்யா,செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.