மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் சென்றார்.
முண்டியம்பாக்கம் மருத்துவமனை யில் விஷ சாராயம் குடித்த பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு முதலமைச்சர் சென்று ஒவ்வொருவரையும் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
டாக்டர்களிடம் அவர்களது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு உரிய சிறப்பு சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினார்.விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினரையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விழுப்புரம்,- செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. இதில் விழுப்புரத்தில் 11 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும் பலியாகி உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் இன்று விழுப்புரம் சென்றார். முண்டியம்பாக்கத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து, முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை கலெக்டர் பழனி நேரில் பார்த்து உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்து உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் கள்ளச்சாராயம் விற்றவர் களிடம் சாராயம் வாங்கி குடித்தனர். இதில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். அவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர், பிம்ஸ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை களுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எக்கியார் குப்பம் சங்கர் (வயது 55), தரணிவேல் (55), பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் (55) ஆகியோர் நேற்று அதிகாலை உயிரிழந்தனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ மூர்த்தி (60), ராமு மனைவி மலர்விழி (70) ஆகியோர் நேற்று மதியம் உயிரிழந்தனர். மரக்காணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மண்ணாங்கட்டி (59) தீவிர கிசிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உடல் நிலை மோசமடைந்தது. இதனால் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடிவெடுத்து புறப்பட்ட போது அவர் உயிரிழந்தார்.
இன்று 5 பேர் மரணம்
மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த எக்கியார் குப்பத்தை சேர்ந்த விஜயன் (58), மரக்காணத்தை சேர்ந்த சங்கர், சரத்குமார் மற்றும் ராஜேவேல் ( 38), விஜயன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தனர்.
இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. கள்ளச் சாராயம் குடித்து பலியான 4 பேர் உடல் பிரேத பரிசோத னைக்கு பின் எக்கியார் குப்பம் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் எக்கியார் குப்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கள்ளச்சாராயம் விற்றதாக மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அமரனை ஏற்கெனவே போலீசார் கைது செய்தனர். தற்போது முத்து (30), ஆறுமுகம் (50), ரவி (46), மண்ணாங்கட்டி (52) ஆகிய 4 பேரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்க 10 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
செங்கல்பட்டில் 5 பேர் பலி
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியான நிலையில் மேலும் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் அடுத்த பெருங்கர ணை, இருளர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி ( 30). இவருடைய மனைவி அஞ்சலி (22). இவர்களுடன் அஞ்சலியின் தாய் வசந்தாவும் (42) வசித்து வந்தார். நேற்று முன்தினம் 3 பேரும் சேர்ந்து கள்ளச் சாராயம் குடித்தனர்.
இதில் சின்னத்தம்பி, அவரது மாமியார் வசந்தா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடிய அஞ்சலியை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கணவன் மனைவி பலி
இந்த நிலையில் சித்தாமூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வென்னியப்பன் (65), அவரது மனைவி சந்திரா (55) ஆகியோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்தனர். இதில் கணவன் -மனைவி இருவரும் உயிரிழந்தனர். இதில் பலியான வென்னியப்பன் மற்றும் சந்திரா ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்த சின்ன தம்பி மற்றும் வசந்தா ஆகியோருக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் பெருங்கரணை பகுதியை சேர்ந்த முத்து (55) என்பவர் இன்று காலை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
இதனால் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே கள்ளச்சாராயம் குடித்த செய்யூர் தாலுகா, புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செம்பு (60), ராஜி (32), பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (65), சங்கர் (48) ஆகிய 4 பேருக்கும் நேற்று இரவு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களை உறவினர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே இதே ஆஸ்பத்திரியில் அஞ்சலி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 5 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் வேறு யாருக்காவது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கள்ளச்சாராயம் விற்றதாக கரியன் தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம்ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகன சுந்தரம், மதுராந்தகம் மதுவிலக்கு அமல்பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகிய 3 பேரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார்.