Close
நவம்பர் 22, 2024 10:37 காலை

புதுகை பேருந்து நிலையம் அருகே சாலையோர மாலைநேர பூங்கா திறப்பு

புதுக்கோட்டை

புதுகை பேருந்து நிலையம் அருகே சாலையோர மாலை நேர பூங்காவை ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் திறந்து வைக்கிறார், மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா

புதுக்கோட்டை  பேருந்து நிலையத்தின் மேற்குப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர மாலைநேர பூங்காவினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகில், டி.டி.பிளான் சாலையில், சாலையோர மாலைநேர பூங்காவினை,  மாநிலங்களவை  உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா (19.05.2023) திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கூறியதாவது: பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் பொதுமக்களின் உடல்நலன் மற்றும் பொழுதுபோக்கிற்கும் பல்வேறு திட்டங்களை  முதலமைச்சர்  செயல்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி, புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அவர்களின் திட்ட நிதியிலிருந்து ரூ.65 இலட்சம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதி ரூ.24 இலட்சம் என மொத்தம் ரூ.89 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, சாலையோர மாலைநேர பூங்காவை மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா திறந்து வைத்துள்ளார்.

இந்த பூங்காவில் சிறுவர், சிறுமிகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்களும், பொதுமக்கள் மாலை நேரங்களில் அமர்ந்து இளைப்பாருவதற்காகவும், பூச்செடிகளுடன் கூடிய அமருமிடங்களும், எழிலார்ந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை எழில்சார்ந்த கண்கவர் ஓவியங்களும், சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே புதுக்கோட்டை நகரில் பொதுமக்கள் அனைவரும் தங்களது ஓய்வு நேரங்களை இளைப்பாருவதற்காக இப்பூங்காவினை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர்கவிதா ராமு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையாளர் (பொ) எஸ்.டி.பாலாஜி, வட்டாட்சியர் விஜயலெட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தாமரை பாலு, காதர்கனி, ஜெயலட்சுமி, குமாரவேலு, க.லதா, பழனிவேல், சுகாதார ஆய்வாளர் மகாமுனி, வருவாய் ஆய்வாளர் விஜயஸ்ரீ, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top