Close
நவம்பர் 22, 2024 10:10 காலை

திருவொற்றியூர் குடியிருப்போர் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு:

சென்னை

திருவொற்றியூர் குடியிருப்போர் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு: போலீஸார் வழக்கு பதிவு

திருவொற்றியூரில் குடியிருப்போர் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்பட்ட புகாரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திட திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் எதிரே ஹன்சா கோர்ட் யார்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 265 வீடுகள் அமைந்துள்ளன. இங்கு குடியிருப்போர் நல சங்கம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரிடமிருந்தும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக சந்தா செலுத்துகின்றனர்.

இந்நிலையில் கட்டடங்களை புதுப்பித்து வர்ணம் பூசுதல், பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் உள்ளிட்டவைக ளுக்காக ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமிருந்தும் தலா ரூ.55 ஆயிரம் ரூ. 1.30 கோடி சில ஆண்டுகளுக்கு முன்பு வசூலிக்கப்பட்டதாகவும், இதில் ரூ. 22 லட்சம் நிதியை நல சங்க நிர்வாகிகளாக செயல்பட்டுவந்த இளங்கோ, கருப்பையா, மகேஸ் ஆகிய மூன்று பேர் முறைகேடு செய்துவிட்டனர்.

இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் எஸ்.சுகுமார், எம்.டி.சேகர் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சரவணக்குமார் வழக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால், இது குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸாருக்கு புதன்கிழமை உத்தரவிட்டார். இதனையடுத்து திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top