இந்திய அரசின் நேரு யுவகேந்திரா புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறு தானியங்கள் மூலிகைகள் மற்றும் சிறுதானிய உணவுகள் கண்காட்சி புதுக்கோட்டை அன்னை கேட்டரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 5.6.2023 அன்று சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை என்னும் தலைப்பின்கீழ் சிறுதானிய உணவு வகைகள் மற்றும் மூலிகைகளின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறையின ருக்கு எடுத்துரைக்கும் விதமாக கண்காட்சி மற்றும் இளையோர் கருத்தரங்கத்தினை புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா அன்னை கேட்டரிங் கல்லூரி மற்றும் சுவாமி விவேகானந்தர் மகளிர் மன்றம் ஆகியவை இணைந்து நடத்தின.
நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர் தலைமையில் அன்னை கேட்டரிங் கல்லூரி தாளாளர் அருள் வல்லப ராஜ் முன்னிலையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்செல்வகுமார் சிறுதானிய கண்காட்சியினை தொடக்கி வைத்தார்.
கண்காட்சியில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு ஆர்வலர்களான பல்வேறு தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு சிறு தானியங்களை அடிப்படையாகக் கொண்ட தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற இளையோர் கருத்தரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியினை நேரு யுவ கேந்திரா திட்ட உதவி அலுவலர் ஆர். நமச்சிவாயம் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு செயல்பாட்டாளர் திரு மரம் ராஜாவுக்கு நேரு யுவகேந்திரா சார்பில் பாராட்டு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது .
மேலும் விழாவில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு அதன்படி விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மஞ்சள் நிற துணிப்பைகள் வழங்கப்பட்டன விழாவில் சுமார் 150 இளைஞர்களும் இளம்பெண்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
நிறைவாக புத்தாஸ் வீரக்கலைகள் கழக நிறுவனர் சேது கார்த்திகேயன் நன்றி கூறினார் . விழா ஏற்பாடுகளை அன்னை கேட்டரிங் கல்லூரி நிர்வாகத்தினருடன் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர்கள் முத்துமாரி மற்றும் வாசு ஆகியோர் செய்திருந்தனர்