புதுக்கோட்டை மாவட்டம், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் பணியை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தொடக்கி வைத்தார்.
புதுக்கோட்டை – திருமயம் சாலையில், வெள்ளாற்றின் அருகில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகள் நடும் பணியை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (15.06.2023) தொடக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 5,00,000(ஐந்து லட்சம்) மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை, தமிழ்நாடு முதலமைச்சர் 07.06.2023 அன்று சென்னையில் தொடக்கி வைத்தார்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும், புளி, நாவல், அரசு, ஆல், புங்கன், பாதாம், இலுப்பை உள்ளிட்ட பல்வேறு மரங்களுடன் 15,000 மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், திருச்சி – இராமநாதபுரம் சாலையில், புதுக்கோட்டையிலிருந்து திருமயம் செல்லும்; சாலையில் வெள்ளாற்றின் அருகில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்படவுள்ள சுமார் 75 மரக்கன்றுகளுக்கு இணையாக 750 மரக்கன்றுகள் நடும்விதமாக, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும் என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் வேல்ராஜ், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், உதவி கோட்டப் பொறியாளர் சண்முகசுந்தரபூபதி, உதவிப் பொறியாளர்கள் கு.கார்த்திகேயன், இரா.செந்தில்குமரன், செ.இரவீந்திரன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;