பாரதி உலகிலுள்ள பல நாடுகளை அங்கெல்லாம் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பாடியுள்ளார். அவ்வகையில் அவர் தேசியக் கவிஞராக மட்டுமல்லாமல். சர்வ தேசியக் கவிஞராகவும் காட்சியளிக்கிறார்.
இந்தச் சிறப்பு பாரதி காலத்திலோ அவருக்கு முற்பட்ட காலத்திலோ வாழ்ந்த வேறெந்தக் கவிஞரிடமும் நாம் காணாததாகும். பாரதியாருக்கே உள்ள இந்தத் தனிச்சிறப்பி னைப் புலப்படுத்தும் பொருட்டே, ‘உலக மகாகவி,யாக அவரை மதித்து, அதே பெயரை இந்த நூலுக்கும் வழங்கியுள்ளேன்” என்கிறார் தன் முன்னுரையில் “உலக மகா கவி பாரதியார்” நூலாசியர் ம.பொ.சி.
ம.பொ.சி அவர்கள், “பாரதியாரின் தனிப்பாடல்களிலே எத்தனை எத்தனையோ புதுமையான செய்திகள் புரட்சிகரமான கருத்துகள் இலைமறைகாயென மறைந்துள்ளன.அவற்றையெல்லாம் வெளிப்படுத்தி பாரதியின் புகழைப் பரப்ப வேண்டுமென்ற குறிக்கோளில் (பக்.5) செப்.11, 1966 -ஆம் ஆண்டு பாரதியின் நினைவு நாளில் இந்த நூலை ‘இன்ப நிலையம்’, என்ற பதிப்பகத்தின் வழி வெளியிட்டிருக்கிறார்.
தற்போது, பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி, பாரதியார் பல்கலைக்கழகம், பாரதியார் புகழ் பரப்ப ஏற்படுத்தியுள்ள “காணி நிலம்” என்ற உயராய்வு மையத்தின் மூலம், பாரதி குறித்து வெளியான மறுபதிப்பு காணாத அரிய நூல்களை மறுபதிப்பு செய்யும் நோக்கில் ம.பொ.சியின் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
உலக மகாகவி பாரதியார் எனும் ம.பொ.சியின் இந்த நூல் பாரதியை உலக விடுதலைக்கவியாக, சமதர்மக் கவியாக, சமய நல்லிணக்கக் கவியாக, உயிர்களை அன்பால் ஒருங்கிணைக்கும் கவியாக உலகமகாகவியாக உணரவைக்கும் ஒப்பற்ற நூல் என்று இந்நூல் பதிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் உயராய்வு மைய இயக்குனர் பேரா. சிற்பி பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், பேரா.முனைவர் சி.சித்ரா ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.
96 பக்கங்களைக் கொண்ட இதில், உலக மகாகவி பாரதி, பாரதி கண்ட காந்தி, புதுயுகத்தின் முதற் கவிஞன், பாரதமாதா பள்ளியெழுச்சி, தேசிய திட்டம் என்ற ஐந்து தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளது.
இலங்கைப் பிரச்சினை, பிஜித்தீவு தமிழ் பெண்கள் நிலை, ரஷ்ய ஜார் மன்னர் கொடுமை, ரஷ்யப் புரட்சி, ஹிட்லர் சர்வாதிகாரம், என்று பாரதி வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டு பாரதியை ஒரு வரலாற்று ஆசிரியராகவே சித்தரித்தள்ளார் ம.பொ.சி.
காணி நிலம், மகாகவி பாரதியார் உயராய்வு மையம்,பதிப்புத் துறை,பாரதியார் பல்கலைக்கழகம்,கோயம்புத்தூர்.
…பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை..