Close
நவம்பர் 22, 2024 6:52 காலை

மாநிலக் கல்வி உரிமைகளில் ஒன்றிய அரசின் தலையீடு கூடாது: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்

தமிழ்நாடு

திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலக்குழுக்கூட்டம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநிலக் குழு கூட்டம் 18/6/2023 ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பூரில் உள்ள எம்.கே.எம். ரிச் அரங்கில் நடைபெற்றது.

மாநிலத் தலைவராக தோழர் எஸ்.கே.கங்கா தேர்வு செய்யப் பட்டார். இந்தக் கூட்டத்தில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 தமிழக அரசு சார்பில் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும். கவிஞர் தமிழ் ஒளி பெயரில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு இருக்கை அரசு சார்பில் அமைக்க வேண்டும். மேலும் கவிஞர் தமிழ் ஒளி திருவுருவ சிலையை சென்னையில் மே தின பூங்காவில் நிறுவ வேண்டும்.

மாநிலக் கல்வி உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடு வதை நிறுத்த வேண்டும். இந்த ஆண்டுக்கான தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு ஒன்றிய அரசே கலந்தாய்வு நடத்தும் என்ற முடிவை கைவிட வேண்டும்.

எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன் நூற்றாண்டை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும், நெல்லையில் அவரது நினைவாக ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும். மேலும் எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன் பெயரில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு இருக்கை அரசு சார்பில் அமைத்திட வேண்டும்.

பள்ளி பாடத்திட்டத்தில், இந்தியாவின் அடையாளமான வேற்றுமையில் ஒற்றுமையை சிதைக்கும் வண்ணத்திலும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும், இந்துத்துவ எண்ணங்களை புகுத்த நினைக்கும் NCERT ன் போக்கை இக்குழு வன்மையாக கண்டிக்கிறது. அக்குழு சமீபத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாடு
மாநிலக்குழுவில் பங்கேற்ற கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் பிறந்த கலை இலக்கிய ஆளுமைகளை நினைவு கூறும் வகையில், அவர்கள் பிறந்த ஊரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அவர்களின் பெயர்களை சூட்ட வேண்டும்.

தமிழகத்தில் அரசு நியமித்துள்ள தற்காலிக ஆசிரியர்க ளுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாது, என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதனை உடனடியாக வாபஸ் பெற்று மே மாதத்திற்கான ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.

பொறியியல், வணிகவியல் இரண்டாம் ஆண்டு மாணவர் களுக்கும் தமிழ் பாடம் கற்பிக்கப்படும், என்ற தமிழக அரசின் ஆணையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கான தகுதியான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் மு. வீரபாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிர்வாக இயக்குநர் க. சந்தானம், கலை இலக்கியப் பெருமன்றப் பொதுச்செயலர் மருத்துவர் த. அறம், பொருளாளர் ப.பா. ரமணி, துணைத் தலைவர் எல்லை சிவகுமார், துணைச் செயலர் கோவை ஜான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top