தமிழகத்தில் ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னர் என்ற பெருமையை பெற்ற ராஜகோபால தொண்டைமான் மன்னருக்கு 101 -ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
ஆங்கிலேய ஆட்சி முடிவுக்கு வந்து நாடு சுதந்திரம் அடைந்த போது இந்தியா முழுவதும் பரவி இருந்த சமஸ்தானங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டது . ஆனாலும் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகஸ்ட் 15 அன்று இணைக்கப் படவில்லை.
சுதந்திரம் அடைந்து 7 மாதங்கள் கழித்து தான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் ராஜகோபால தொண்டைமான் முறைப்படி இந்தியாவோடு தனது சமஸ்தானத்தை இணைத்ததோடு, தனது அரண்மனை கஜானாவில் இருந்த பணம் முழுவதையும் மத்திய அரசிடம் ஒப்படைத்தார் . அதுவரையிலும் புதுக்கோட்டை சமஸ்தானம் தனி ராஜ்யமாக தான் இருந்தது.
புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராமச்சந்திர தொண்டை மானின் மகனாக 1922 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 -ஆம் தேதி பிறந்தார் ராஜகோபால தொண்டைமான். தனது ஆறாவது வயதில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னராக பதவி ஏற்றார். சிறுவன் என்பதால் சமஸ்தான நிர்வாகத்தை ஆங்கிலேய அதிகாரி சர் அலெக்சாண்டர் டாட்டென்ஹாம் கவனித்துக் கொண்டார். தன் 22 -ஆவது வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றார்.
தொடர்ந்து, புதுக்கோட்டை சமஸ்தானத்தை 20 ஆண்டுகள் ஆட்சி செய்து நாடு சுதந்திரம் பெற்றதற்கு பின்னால் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்திய அரசுடன் இணைத்தவரும் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தோடு தான் வாழ்ந்த தன்னுடைய அரண்மனையை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் செயல்பட வழங்கியவருமான மாட்சிமை தங்கிய மாமன்னர் ஆர். ராஜகோபால தொண்டைமான் அவர்களின் 101 வது பிறந்த நாள் இன்று கொண்டாப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மன்னரின் வாரிசு ராஜா ராஜகோபால தொண்டைமான், திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயா் சாருபாலா ஆா். தொண்டைமான், கம்பன் கழகச்செயலாளர் ரா. சம்பத்குமாா், நகர்மன்ற துணைத்தலைவர் எம். லியாகத்அலி, விநாயகாபார்மா குமார், மூத்த மருத்துவர் எஸ். ராமதாஸ்,
இந்திய விவசாயிசங்க தலைவர் ஜி.எஸ். தனபதி, எம்ஆர்எம். முருகப்பன், குமார் காடுவெட்டியார், கவிஞர் நிலவை பழனியப்பன், அமமுக மாவட்ட செயலர் வீரமணி, அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கம்பன் கழக கூடுதல் செயலர் ச. பாரதி மற்றும் மன்னர் நூற்றாண்டு விழா குழு சான்றோர்கள் கலந்து கொண்டு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஏற்பாடுகளை நேர்முக உதவியாளர் சக்திவேல் உள்ளிட்டோர் செய்திருந்தார்.
நூற்றாண்டை முன்னிட்டு ராஜா ராஜகோபால தொண்டை மான் மன்னருக்கு புதுக்கோட்டையில் அரசின் சாா்பில் அருங்காட்சியகத்துடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டில் அறிவித்தார். அது இன்று வரை நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.