மாமன்னன் மக்களுக்கான ப(பா)டம்…
மாமன்னன் என்னும் கதாபாத்திரத்தின் பெயர் நடிகர் உதயநிதிக்கான பெயராக இல்லாமல், நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரம் என்னும் பொழுதே! தொடக்கத்திலேயே நிமிர்ந்து உட்கார வைக்கிறது படம்.
படம் வெளிவருவதற்கு முன்பாக வெளிவந்த விமர்சனங்களை மனதில் சுமந்து கொண்டு ஒருவேளை இது சாதியைப் பேசும் படமாக இருக்குமோ? என திரையரங்கிற்குள் சென்றால்,
இது முழுக்க முழுக்க சமூகநீதி பேசும் படமாக இருக்கின்றது..பிள்ளைகளுக்கு அடிக்கச் சொல்லிக் கொடுக்கும் பொழுது எதிர்க்காதவர்கள்,
அவர்களுக்குப் படிக்கச் சொல்லிக் கொடுக்கும் பொழுது எதிர்ப்பதைக் காட்டும் பொழுது, கல்விதான் சமூக மாற்றத்திற்கான பேராயுதம் என்பதை படம் பறை சாற்றுகிறது.
படத்தின் கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பிற்கானமுதல் மூன்று இடங்களை கொடுக்க வேண்டும் என்றால்,மூன்று இடங்களையும் வடிவேலுக்குத்தான் கொடுக்க வேண்டும்.
வடிவேலுவின் வாழ்நாளுக்கு சிறந்த திரைப்படமாக இதுவே இருக்கும்.படத்தின் தயாரிப்பாளர்,வெளியீட்டாளர்,நாயகன் உதயநிதியாக இருந்தாலும் அவரது பெயர்திரையில் நான்காவதாகத்தான் வருகிறது. அப்படிவரும் பொழுதே தெரிந்துவிடுகிறது.படத்தில் கதைதான் ஹீரோ என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.
சமூகவலைத் தளங்கள் எத்தனையோ தீயதைச் செய்தாலும்,
சமத்துவத்தைப் பேசுவதிலும், சமூக நீதியைப் பேசுவதிலும்
மிக முக்கியப் பங்காற்றுவது சமூக வலைத்தளங்கள்தான் என்பதை நம்மால் ஒப்புக்கொள்ள முடிகின்றது.
எந்தச் சாதியையும் குறிப்பிடாமல்,சாதிச் சங்கங்கள் என்பது மக்களைப் பிரித்து வைப்பதற்கான உத்தியாகவே இருக்கின்றது என்பதையும், இன்றைய தலைமுறை சாதிச் சங்கங்களின் சூழ்ச்சிகளுக்குள் சிக்காத தலைமுறையாக,
சுயமாகச் சிந்திக்கின்ற சுயமரியாதை மிக்க தலை முறையாகத் திகழ்கின்றது என்பதையும்,திகழ வேண்டும் என்பதையும் பளிச்செனப் படம்பிடித்துக் காட்டுகின்றார் இயக்குனர்.
இன்னொருவரிடம் பெற்ற வலியை, நாம் இன்னொருவருக்கு கொடுத்துவிடக் கூடாது என்பதை வடிவேலு எல்லோரையும் அமரவைத்துப் பேசுவது திரைக்கதையின் நேர்த்தி..
இத்திரைப்படத்தில் நடித்ததைப் பொறுத்த வரையில் திரையில் நாயகனாக நிற்பவர் நடிகர் வடிவேலுதான்.ஆனால் இப்படியொரு படத்தில் இயல்பாக நடித்துச் சென்றுநிஜத்தி லும் நாயகனாக உயர்ந்து நிற்கின்றார் உதயநிதி.. மாமன்னன் மக்கள் மனதில்மகுடம் சூடுவான்.
# சிகரம்சதிஷ்,எழுத்தாளர்- ஆசிரியர் #