Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

சிறப்பான ஆட்சி மூலம்  மக்களின் இதயங்களை வென்றவர் காமராஜர்

பெருந்தலைவர் காமராஜர்

காமராஜர்

கல்வி மற்றும் தொழில் துறைகளில் ஏராளமான சாதனைக ளைப் படைத்து தனது சிறப்பான ஆட்சி மூலம் தமிழக மக்களின் இதயங்களை வென்றவர் காமராஜர் என ஐ.நா மன்ற முன்னாள் அரசியல் அலுவலர் இரா கண்ணன் சனிக்கிழமை சென்னையில் புகழாரம் சூட்டினார்.

திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் 70 -ஆவது சிந்தனை சாரல் மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ‘சாதனையின் நாயகன் பெருந்தலைவர் காமராஜர்’ என்ற தலைப்பில் ஐ.நா. மன்ற முன்னாள் அரசியல் அலுவலர் இரா. கண்ணன் கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அப்போது கண்ணன் பேசியது: இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இன்றைக்கு தமிழர்கள் உயர் வேலை வாய்ப்புகளில் இடம் பெற்றதற்கு காமராஜர் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட கல்வி திட்டங்கள் தான் அடித்தளமாக அமைந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை 12 ஆயிரத்தில் இருந்து தனது ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் 27 ஆயிரம் ஆக உயர்த்தியவர் காமராஜர்.

தனது ஆட்சி காலத்தில் தமிழகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கையை 29 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக உயர்த்தியவர்.  அவர் அறிமுகம் செய்த மதிய உணவுத் திட்டம் தான் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு இன்றைக்கு தமிழக அரசால் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை காமராஜர் தான் கொண்டு வந்தார்.

ஆவடி, திருச்சி பெரம்பூர் நெய்வேலி,மணலி உள்ளிட்ட இடங்களில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை அமைக்க காரணமாக இருந்தவர். காமராஜர் ஆட்சியில் சிப்காட் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு தமிழகம் முழுவதும் 23 தொழிற்பேட்டைகளை அமைத்தார்.

தாழ்த்தப்பட்ட சமுதாயங்களை சார்ந்த பரமேஸ்வரன்,  கக்கன் உள்ளிட்டோரை அறநிலையத்துறை, உள்துறை போன்ற முக்கிய துறைகளில் அமைச்சராக நியமனம் செய்து சமூக நீதிக்கு அடித்தளம் அமைத்தவர் காமராஜர்.

கல்வி, தொழில், அடிப்படை கட்டமைப்பு விவசாயம்,  சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி தனது சிறப்பான ஆட்சியின் மூலம் மக்களின் இதயங்களை வென்றெடுத்தவர் காமராஜர் என்றார் கண்ணன்.

நிகழ்ச்சியில் வாசகர் வட்டத்தின் புரவலர் தொழிலதிபர் ஜி வரதராஜன், நிர்வாகிகள் என். துரைராஜ், குரு. சுப்பிரமணி, எம். மதியழகன், நூலகர் டானிக் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top