புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘தமிழ்நாடு நாள் விழா” விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘தமிழ்நாடு நாள் விழா” கொண்டாடும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, (18.07.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையொட்டி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினையும் அவர் திறந்து வைத்தாா்.
பேரறிஞர் அண்ணா அவர்களால் 1967 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் நாள் சட்டமன்றத்தில் மெட்ராஸ் மாகாணம் என்பதற்கு பதிலாக ‘தமிழ்நாடு” என பெயர் மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க வருடந்தோறும் ஜுலை 18 ஆம் நாளினை, தமிழ்நாடு நாளாக தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நாள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாணவ, மாணவியர்களிடையே ‘தமிழ்நாடு நாள்” பெருமை குறித்து அறிந்துகொள்ளும் வகையிலும் செய்தி மக்கள் தொடர்புத் துறை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை, இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, சந்தைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, திருக்கோகர்ணம் அரசு மேல் நிலைப்பள்ளி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி.
தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வைரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி,ஆகிய 8 பள்ளிகளைச் சேர்ந்த 200 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட ஆட்சியரக் ஐ.சா.மெர்சி ரம்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சியினை, ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரூ.1,76,000 மதிப்பிலான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
‘தமிழ்நாடு நாள் விழா” குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 18.07.2023 முதல் 23.07.2023 வரை நடைபெற உள்ளது.
எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இப்புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) சிவக்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ,
வட்டாட்சியர் விஜயலட்சுமி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், ராஜு, உதவித் திட்ட அலுவலர் (பொ) தங்கமணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.