தொழிலாளர் இணை ஆணையர் அறிவுரைக்கு மாறாக போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த முறையில் ஓட்டுனர் நடத்துனர் பணி நியமனம் செய்யும் நடவடிக்கைக்கு போக்குவரத்து கழக ஏஐடியூசி சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக எஐடியூசி தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் புதன்கிழமை தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் சங்க துணை செயலாளர் என்.ஆர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது .
பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். சம்மேளன துணைத் தலைவர் துரை. மதிவாணன், ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் ஆகியோர் மாநிலகுழு முடிவுகள் பற்றி விளக்கி பேசினார்கள்.
கூட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, மாநிலகுழு உறுப்பினர் தி.கஸ்தூரி, நிர்வாகிகள் வி.பாஸ்கர், எம்.தமிழ்ச்செல்வன் ஆர்.ரங்கதுரை, பி.முருகவேல், நிர்வாக குழு உறுப்பினர்கள் என்.ராஜேஷ்கண்ணன், பி.செந்தில்,. மோகன்ராஜ், வி.அசோகன்,. கே.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சி.ராஜமன்னன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் கடந்த 10 வருடத்திற்கு மேலாக ஓய்வு பெற்று சென்றுள்ள ஓட்டுனர், நடத்துனர்,தொழில்நுட்ப பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை.
பணியில் இருப்பவர்கள் கூடுதல் பணி பார்க்க வேண்டிய அவல நிலை உள்ளது .இந்த நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணிக்கு ஆட்களை எடுக்காமல், ஒப்பந்த முறைகளில் ஓட்டுநர்,நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதை அனைத்து தொழிற்சங்கங்களும் கடுமையாக எதிர்த்துள் ளனர்.
சென்னையில் திடீர் வேலை நிறுத்தப் போராட்டமும் நடைபெற்றுள்ளது. தொழிலாளர் இணை ஆணையர் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகளை அழைத்துப் பேசி ஒப்பந்த முறையில் ஆட்களை நியமனம் செய்யக்கூடாது.
ஏற்கெனவே வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங் களுக்கு ஆட்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று வழிகாட்டியதற்கு மாறாக சென்னை மாநகரத்தில் ஒப்பந்த முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது.
கும்பகோணம் மண்டலம் உள்ளிட்டு அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் உடனடியாக தேர்வு செய்யப்பட வேண்டும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆறு வருடங்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர் இவர்களுக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்க வேண்டும். பேருந்துகளை பராமரிப்பதற்கு தரமான உதிரிபாகங்கள் வழங்க வேண்டும்.
தொழிலாளர் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்து வருகிற ஜூலை 29 -ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் அனைத்து தொழிற்சங்க மாவட்ட மாநாட்டில் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.