Close
நவம்பர் 21, 2024 6:27 மணி

திருவொற்றியூர்-மணலி மேம்பால திட்டப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு

திருவொற்றியூர்-மணலி இடையேயான மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஏழு ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெற்று வருவதை கண்டித்து சேக்காடு, மணலி பொது வியாபாரிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை மணயிலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் .

சென்னை  திருவொற்றியூர்- மணலி சாலையில் பக்கிங்காம் கால்வாயில் சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் மேம்பாலம் அமைக்கும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கோரி சேக்காடு, மணலி பொது வியாபாரிகள் சங்கம் சார்பில் மணலியில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முறையான திட்டமிடுதல் இல்லாத காரணங்களால் திருவொற்றியூர் மணலி இடையே  பக்கிங்காம் கால்வாயில்  மேம்பாலம் அமைக்கும் பணி சுமார் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மந்தகதியில் நடைபெற்று வருகின்றன.
பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டதையடுத்து மாற்று வழிப்பாதை தற்காலிகமாக அமைக்கப்பட்டது. அதுவும் பல கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.  ஏராளமான கனரக வாகனங்கள் செல்லும் இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு பாலத்தை கட்டி முடித்து பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இப்பிரச்னையை வலியுறுத்தும் வகையில் திருவொற்றியூர் மணலி பகுதிகளில் பகுதிகளில் விரைவில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. அதற்குள் அதிகாரிகள் விழித்துக் கொண்டு உடனடியாக பாலம் அமைக்கும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்றார் வெள்ளையன்.
போராட்டத்தில்  சேக்காடு, மணலி பொது வியாபாரிகள் சங்க தலைவர் சண்முகம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் சௌந்தரராஜன், ராமசாமி, சுகுமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top