Close
நவம்பர் 22, 2024 8:44 காலை

தாராசுரம் நேரு அண்ணா மார்க்கெட் கடைகளுக்கு டெண்டர் விடும் முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

ஏஐடியுசி சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தாராசுரம் நேரு அண்ணா மார்க்கெட் கடைகளுக்கு டெண்டர் விடும் முறையை ரத்து செய்ய வேண்டுமென  வலியுறுத்தி ஏஜடியூசி தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஏஐடியூசி நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம்  (24.07.2023) அன்று  அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:

கும்பகோணம் மாநகராட்சி தாராசுரம் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட்டில் கடந்த 20 ஆண்டுகளாக மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகிறார்கள் தற்சமயம் 383 தரைக்கடை வியாபாரிகளும் 140 ஷட்டர் கடை வியாபாரிகளும் சட்டத்திற்கும், நகராட்சி நிபந்தனைகளுக்கும் உட்பட்டு வியாபாரம் செய்து வருகிறோம்.

கடந்த 2019-20 ஆம் ஆண்டுகளில் ரூ.3,43,50,000/- க்கு டெண்டர் எடுக்கப்பட்டது.2020-21 ஆம் ஆண்டுகளில் ஐந்து சதவீதம் உயர்த்தி ரூ.3,60,67,500/- க்கும் 2021-22ஆம் ஆண்டுகளில் ஐந்து சதவீதம் உயர்த்தி ரூ.3,78,70,875/- க்கும் மாநகராட்சி விதிமுறைகளின் படி டெண்டர் எடுக்கப்பட்டு சில்லறை வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாமலும் மாநகராட்சிக்கு நஷ்டம் இல்லாமலும் கொரோனா கால நெருக்கடிக்கு மத்தியிலும் முறையாக பராமரிக்கப்பட்டு மார்க்கெட் இயங்கி வந்துள்ளது.

இந்நிலையில் நேரு அண்ணா காய் கனி இலை வியாபாரிகள் நல அறக்கட்டளை மூலம் 2022-23 ஆம் ஆண்டிற்கு ரூ.6,06,00,000/- மிக மிக அதிக தொகைக்கு வியாபாரிகளின் ஆலோசனை யின்றியும்,தெருவியாபார சட்டம் 2015 -க்கு எதிராகவும் டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-22 ஆம் ஆண்டை காட்டிலும் 2022-23 ஆம் ஆண்டில் கூடுதலாக டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 2022-23 ஆம் ஆண்டில் 383 தரைக்கடை வியாபாரிகளும், தலா ரூ.70,000/- ஒப்பந்ததாரர்களிடம் பணம் செலுத்தியுள்ளோம்.
தற்போது 383 தரைக்கடை வியாபாரிகளிடம் ரூ.80,000/- உடனே செலுத்த வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கட்டாயப்படுத்து கிறார்கள்.

இதனால் சில்லறை வியாபாரம் செய்து வரும் தரைக்கடை வியாபாரிகள் 383 பேரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் 2022-23 ஆம் ஆண்டில் 140 ஷெட்டர் கடைகளும், மாநகராட்சிகள் செலுத்திய வாடகை தொகைக்கு இதுவரை ரசீதும் வழங்கப்படவில்லை. ஒப்பந்ததாரர்கள் நிர்பந்திக்கும் தொகையினை எங்களால் கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம்.

இந்நிலையில் மாநகராட்சியால் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட தொகையினை 383 தரைக்கடை வியாபாரிகளும் மாநகராட் சியில் நேரடியாக செலுத்தி ரசீது பெற தயாராக உள்ளோம். ஆகவே 2022-23 ஆம் ஆண்டிற்கான டெண்டர் ரத்து செய்து விட்டு மாநகராட்சியே நேரடியாக எங்களது 383 தரைக்கடை வியாபாரிகளுக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கி மாநகராட்சி நிர்ணயிக்கும் வாடகை தொகையினை நேரடியாக வசூல் செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மனு அளித்த பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெரு வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.சிவக்குமார் தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி ஏஜடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்டத் தலைவர் வெ.சேவையா, நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து கழகத்தின் மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துகுமரன், சங்க நிர்வாகிகள் கே. சரவணன், கே.நாராயணன், எம்.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளில் தீர்வு காணப்படாவிட்டால் ஏஐடியூசி சார்பில் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு எதிர்வரும் 1.08.2023  செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெறும் என ஏஜடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top