Close
செப்டம்பர் 20, 2024 1:38 காலை

ஆவுடையார்கோவில் அருகே நியாயவிலைக்கடை: அமைச்சர் ரகுபதி திறப்பு

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பூங்குடியில், பகுதிநேர நியாயவிலைக் கடை மற்றும் அங்கன்வாடி மையக் கட்டடத்தினை திறந்து வைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், பூங்குடியில் பகுதிநேர நியாய விலைக் கடை மற்றும் அங்கன்வாடி மையக் கட்டடம் திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பூங்குடியில், பகுதிநேர நியாயவிலைக் கடை மற்றும் அங்கன்வாடி மையக் கட்டடத்தினை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் வகையில், பொதுமக்களின் இல்லங்களுக்கு அருகிலேயே புதிய நியாயவிலைக் கடைகள் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று உணவுப் பொருட்கள் வாங்குவது தவிர்க்கப்படுகிறது.

அதன்படி, பூங்குடி பகுதிநேர அங்காடி ஆவுடையார்கோவில் முழுநேர அங்காடியிலிருந்து பிரிக்கப்பட்டு தற்போது 147 குடும்ப அட்டைகளுடன் செயல்படும் வகையில்  தற்போது திறந்து வைக்கப்பட்டது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. தாய் அங்காடியான ஆவுடையார்கோவில் தலைமை அங்காடியிலிருந்து பூங்குடி அங்காடி சுமார் மூன்றை  கி.மீ தூரம் உள்ளதாலும், மழைக் காலங்களில் பொது மக்கள் தங்களது அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு மிகவும் சிரமமாக இருந்து வந்த நிலையில் இனி பூங்குடி கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தங்கள் கிராமத்திலேயே பெற்று கொள்ளவும் வசதி  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பூங்குடியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.10.19 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள குழந்தைகள் அனைவரும் பயனடைவார்கள்.

எனவே இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழுத் தலைவர்  உமாமகேஸ்வரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் துரை மாணிக்கம், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமநாதன்,

துணைப் பதிவாளர் ஆறுமுகப் பெருமாள், கூட்டுறவு சார்பதிவாளர் அன்னலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தமிழ்செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில்குமரன்.

சிறுமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கல்யாணசுந்தரம், காவதுகுடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்  தேவ.மனோகரன், கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர் ரெ.ராமமூர்த்தி, சங்க செயலாளர் எஸ்.சின்னப்பா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்;

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top