அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்தவித சிறப்பு சலுகைகளும் அளிக்கவில்லை என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: சிறையிலுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு முதல் வகுப்பு கைதிகளுக்கான வசதி களை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த சிறப்பு சலுகையும் அவருக்கு அளிக்கப்படவில்லை. கேண்டீனில் உணவு வாங்கி சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது குளிரூட்டப்பட்ட அறை வசதி செய்துதரப்படமாட்டாது. அதை முதலமைச்சரும் அனுமதிக்க மாட்டார்.
மேக்கோ தாட்டு அணை கட்டும் விவகாரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டில்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை கூறியிருக்கிறார். நீர்வளத்துறை மூலம் சட்ட ரீதியாக எதைச்செய்ய வேண்டுமோ அதை செய்வார்.
நீதிமன்றங்களில் அம்பேத்கர் உருவப்படத்தை அகற்றுவது தொடர்பான கேள்வியே எழவில்லை. முதலமைச்சர் அறிவுறுத்தியபடி நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் நான் நேரில் சந்தித்து அவருடைய சார்பில் சட்டத்துறை சார்பில் கடிதம் கொடுத்தேன்.
அதற்கு தற்பொழுது என்ன நிலைமை இருக்கிறதோ அதோ நிலை நீடிக்கும். அம்பேத்கர் படத்தை அகற்றப் போவதில்லை இருக்கக்கூடியது இருக்கட்டும். இதை வழக்கறிஞர்களிடம் கூறியிருக்கிறோம். அரசுக்கும் உறுதி தருகிறோம். இந்த முடிவை முதலமைச்சரிடம் சொல்லுங்கள் என நீதியரசர் கூறினார்
புதுக்கோட்டையில் கடந்த 5 நாள்களாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன. பிரச்னைக்கு தீர்வு காண புதுக்கோட்டை மாவட்டத்துக்கான பொறுப்பு நீதியரசர்கள் தலையிட்டு தீர்வு காண்பார்கள். அரசு தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதில் தலையிட்டு தீர்வு காண்போம்.
விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வருவது குறித்த கேள்விக்கு, ஆண்டுக்கு ஆண்டு குறிப்பிட்ட சதவீதம் விலை வாசி உயர்வது இயற்கைதான் அதை இல்லை யென்று கூறமுடியாது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை யிலான ஆட்சியில் விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்துக் கொண்டு வருகிறோம்.
கடந்த 2 ஆண்டுகளில் விலை உயராத வகையில் சாதாரண மக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு நாங்கள் பாதுகாத்து வருகிறோம். ஆனால் சிலர் இன்றைக்கு பதுக்கல் போன்ற வற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து முதலமைச்சர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவார்.
கொடநாடு வழக்குக்காக போராட்டம் நடத்துபவர்கள் நடத்தட்டும். கொடநாடு வழக்கில் யார்யார் எல்லாம் தவறு செய்தார்களோ அவர்கள் சட்டத்தின் முன் கட்டாயம் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள். எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் அவர்களால் தப்பிக்க முடியாது.
ஜெயலலிதா வழக்கில் அவரது உடமைகளை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறதோ அவர்களிடம்தான் கொடுக்கப்படும். அதைத்தவிர்த்து வேறு எவரிடமும் ஒப்படைக்க எங்களுக்கு அனுமதி இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் பாதியை காணவில்லை என பெங்களூரு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அதை அங்குதான் கேட்க வேண்டும் என்றார் அமைச்சர் ரகுபதி. இதில் எம்எல்ஏ- முத்துராஜா, நகரச்செயலர் ஆ. செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.